ஆலங்குடியில் தொழிற்பயிற்சி நிலைய மாணவி விஷம் தின்று தற்கொலை; மற்றொருவருக்கு சிகிச்சை போலீசார் விசாரணை


ஆலங்குடியில் தொழிற்பயிற்சி நிலைய மாணவி விஷம் தின்று தற்கொலை; மற்றொருவருக்கு சிகிச்சை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 May 2019 3:45 AM IST (Updated: 14 May 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடியில் தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவிகள் 2 பேர் விஷம் தின்றனர். இதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள் நதியா(வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி எலி மருந்தை(விஷம்) தின்ற இவர், மறுநாள் காலை வீட்டில் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் நதியாவை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நதியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் அதே தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்த 18 வயது மாணவி ஒருவரும் கடந்த 10-ந் தேதி எலி மருந்தை தின்றார். உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காதல் விவகாரமா?

இந்த சம்பவம் குறித்து நதியாவின் தந்தை பழனியப்பன், தனது மகள் தீராத வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஆலங்குடி போலீசில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நதியாவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவியும் தோழிகள் என்பதும், இவர்கள் 2 பேரும் செல்போனில் நீண்ட நேரமாக பேசி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்திற்கு காதல் விவகாரம் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story