பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த 8 சிறுவர்- சிறுமிகள் மீட்பு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை


பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த 8 சிறுவர்- சிறுமிகள் மீட்பு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 May 2019 3:45 AM IST (Updated: 14 May 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த 8 சிறுவர்- சிறுமிகளை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் தொழில் தற்போது நடைபெற்று வருவதாகவும், இதனால் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் கலெக்டருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின்பேரில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா தலைமையில் ஊழியர்கள் மற்றும் போலீசார் நேற்று வடசேரி பஸ் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சில தாய், தந்தையர்கள் தங்களது குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு வயது குழந்தை முதல் 10 வயது வரையிலான சிறுவர்- சிறுமிகள் 8 பேரையும், அவர்களுடைய பெற்றோர் 5 பேரையும் பிடித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

திருச்செந்தூரை சேர்ந்த ஒரு பெண்ணின் குழந்தைகள் 4 பேரும், மதுரையை சேர்ந்த தாய்-தந்தை இல்லாத சிறுவன் ஒருவனும் அடங்குவர். இந்த சிறுவன் உடலில் சாட்டையால் அடித்து கொண்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தான். அவன் தன்னுடைய உறவினர் மூலம் நாகர்கோவிலுக்கு வந்திருப்பது தெரிய வந்தது. மேலும் 2 சிறுவர்- சிறுமிகள் வள்ளியூரில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கக்கூடியவர்கள் ஆவர். இன்னும் ஒரு சிறுவன் பள்ளி செல்லும் வயதை அடைந்திருந்தான்.

இதையடுத்து அதிகாரி குமுதா மீட்கப்பட்ட 8 பேரையும், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார். பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கவும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். மேலும் நேற்று மாலை கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் இதேபோல் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் தொழில் நடைபெறுகிறதா? என அதிகாரி குமுதா தலைமையிலான ஊழியர்களும், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக அதிகாரி குமுதா கூறுகையில், “வடசேரி பஸ் நிலையத்தில் சில பெற்றோர் தங்களது பிள்ளைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பாக புகார்கள் வருகின்றன. அதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் நாங்கள் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு, அவர்களில் படிக்கும் வயதில் உள்ள சிறுவர்- சிறுமிகளை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனாலும் சில பெற்றோர் பள்ளிகளில் சேர்த்த பிள்ளைகளை ஏதாவது காரணம் கூறி அழைத்து வந்து மீண்டும் பிச்சை எடுக்க வைக்கின்றனர். இனிமேல் முதல்முறையாக பிச்சை எடுத்து பிடிபடும் குழந்தைகளின் பெற்றோரை கண்டித்து அவர்களுடன் குழந்தைகளை அனுப்பி வைக்கவும், தொடர்ந்து இதே செயலில் ஈடுபடும் பெற்றோர் மீது இளைஞர் நீதிச்சட்டத்தின்கீழ் போலீசாரிடம் புகார் செய்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்“ என்றார்.

Next Story