ஈரோட்டில் சுறாவளிக்காற்றுடன் பலத்த மழை வீதிகளை வெள்ளம் சூழ்ந்தது


ஈரோட்டில் சுறாவளிக்காற்றுடன் பலத்த மழை வீதிகளை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 13 May 2019 10:30 PM GMT (Updated: 13 May 2019 9:25 PM GMT)

ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வீதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஈரோடு,

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 100 டிகிரிக்கும் குறையாமல் தினமும் வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளானார்கள்.

அக்னி நட்சத்திரத்தின் தொடக்கத்தில் இருந்தே கோடை மழையும் பெய்யவில்லை. இதனால் வெப்பத்தின் தன்மை குறையாமல் இருந்தது. மேலும், இரவில் மின் வினியோகம் இல்லாதபோது மின்விசிறி, குளிர்சாதன கருவி வசதி இல்லாமல் பொதுமக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் பெரும் சிரமப்பட்டனர்.

நேற்று பகலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. 5.30 மணிஅளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 15 நிமிடங்களுடன் காற்று வீசியது. அதன்பிறகு சுமார் அரை மணிநேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

திடீர் மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருந்தாலும், பலத்த மழையால் பொதுமக்களுக்கு ஒரு சில இடையூறுகளும் ஏற்பட்டன.

ஈரோடு பிரப்ரோடு, சத்திரோடு, நேதாஜி ரோடு, பெருந்துறை ரோடு, தில்லை நகர், மோசிக்கீரனார் வீதி, வி.சி.டி.வி.ரோடு உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கொங்கலம்மன் கோவில் வீதியில் சாக்கடையுடன் சேர்ந்து மழைநீர் பெருக்கெடுத்ததால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதிபட்டனர்.

ஈரோடு மணிக்கூண்டில் இருந்து செல்லும் நேதாஜி ரோட்டில் காலி மது பாட்டில்களும் மழை தண்ணீருடன் மிதந்து சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்களின் சக்கரங்களில் சிக்கிய பாட்டில்கள் வெடித்து சிதறின. இது அந்த பகுதியில் செல்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே கடைகளுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த விளம்பர தட்டிகள் கீழே விழுந்தன. ஈரோடு பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பிகள் (பேரிகார்டர்கள்) சரிந்து விழுந்தன.

தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. அதேபோல் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 3 மணி அளவில் தாளவாடியில் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை சுமார் 30 நிமிடம் பெய்தது. இதேபோல் இக்களூர், சிக்கள்ளி, மரூர், திகினாரை, மல்குத்திபுரம், தலமலை, ஆசனூர், திம்பம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் தொட்டகாஜனூர் அருகே உள்ள பிரகாஷ் என்பவர் தோட்டத்தில் இருந்த 2 தென்னை மரங்கள் தீப்பிடித்தது. இதில் மரங்கள் எரிந்து நாசம் ஆனது.

அந்தியூரில் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதேபோல் பர்கூர் மலை பகுதியிலும் நேற்று மாலை நல்ல மழை பெய்தது. அந்தியூர், மற்றும் தாளவாடி மலை பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

பவானி மற்றும் அருகே உள்ள மயிலம்பாடி பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் 5½ மணி வரை சாரல் மழை பெய்தது. இதேபோல் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரத்திலும் லேசாக மழை தூறியது.

ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களில் நேற்று மாலை மழை வருவதுபோல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றிவிட்டது.


Next Story