அக்னி நட்சத்திரத்தின் போது கட்டிட தொழிலாளர்களுக்கு கட்டாய விடுமுறை - இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
கட்டிட தொழிலாளர்களுக்கு அக்னி நட்சத்திர காலத்தில் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
காரைக்குடி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் பாண்டித்துரை கூறியதாவது:–
எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். ஆட்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கும் சாலைகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
காற்றும் நீரும் சுடுகிறது. ஆனால் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் கட்டிட தொழிலாளிகள் போன்றவர்கள் தங்களது குடும்பத் தேவைகளுக்காக அனல் கக்கும் வெயிலிலும் அயராமல் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
வாட்டி வதைக்கும் வெயில் உடலெங்கும் சிமெண்டு புழுதிகளோடு தலையில் பாரம் சுமந்து கொண்டு மிக உயரத்தில் வைக்கப்பட்டுள்ள மர சட்டங்களால் ஆன பாதையில் நடந்து சென்று வேலை பார்ப்பது பார்ப்பவர்களின் மனதை படுகாயப்படுத்துகிறது.
எனவே அரசின் பார்வை அவர்கள் மீது படவேண்டும். கட்டிட தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்களை கட்டுமான நிறுவனங்கள் வழங்க வேண்டும். அக்னி நட்சத்திரம் போன்ற கடுமையான வெப்பத்தை தரக்கூடிய காலகட்டங்களில் அரசு இவர்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் இவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அரசே வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.