மாடு மேய்க்க தடை விதித்ததால் சாப்டூர் வனத்துறை அலுவலகம் முற்றுகை


மாடு மேய்க்க தடை விதித்ததால் சாப்டூர் வனத்துறை அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 14 May 2019 4:07 AM IST (Updated: 14 May 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் மாடு மேய்க்க தடை விதிக்கப்பட்டதால் மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரையூர்,

பேரையூர் தாலுகாவுக்கு உட்பட்ட டி.கிருஷ்ணாபுரம், எம்.கல்லுப்பட்டி, அய்யம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் மலைமாடுகளை அருகில் உள்ள சாப்டூர் வனத்துறைக்கு சொந்தமான கோட்டமலை பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.

வனத்துறை அனுமதியுடன் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக ஆயிரக்கணக்கான மலைமாடுகளை மேய்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் மாடு மேய்க்கக் கூடாது என்று வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். ஆனாலும் தொடர்ந்து மாடு மேய்த்ததால் மாடு மேய்க்கும் முருகன், மதன்குமார் ஆகியோரை வனத்துறை ஊழியர்கள் பிடித்து தங்கள் அலுவலகம் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாடு மேய்க்கும் தொழில் செய்து வரும் குடும்பத்தினர் 100–க்கும் மேற்பட்டோர் தங்கள் மாடுகளை அழைத்துக்கொண்டு தங்கள் ஊரில் இருந்து சாப்டூர் வடகரைபட்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை தொடர்ந்து மாடு மேய்க்க அனுமதிக்க வேண்டும் என்று வனத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சாப்டூர்–பேரையூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன், வனத்துறை அலுவலர் முத்துகூடலிங்கம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மாடு மேய்க்க மாவட்ட வனத்துறை அதிகாரிதான் அனுமதி அளித்திட வேண்டும். அவரிடம் சென்று சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினர். பின்னர் முருகன், மதன்குமார் ஆகியோரை வனத்துறையினர் விடுவித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் மாடுகளை அழைத்துக்கொண்டு சென்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “5 தலைமுறையாக நாங்கள் கோட்டமலை பகுதியில் தான் மாடு மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால் தற்போது வனத்துறையினர் சரணாலயம் உள்ள இடம் என்று கூறி எங்களை மாடு மேய்க்க அனுமதிக்க மறுக்கின்றனர். எங்களை எப்போதும்போல் கோட்டமலை பகுதியில் மாடு மேய்க்க அனுமதிக்கவில்லை என்றால் மீண்டும் பேரையூர் முக்குசாலை பகுதியில் மாடுகளுடன் சென்று மறியல் செய்வோம்” என்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “சாப்டூர் வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட காப்பு காடுகளாகும். மேலும் சாம்பல் நிற அணில்கள் வசிக்கும் சரணாலயம் ஆகும். இதனால் தற்போது மாடு மேய்க்க அனுமதி இல்லை. எங்கள் மாவட்ட அதிகாரிதான் அனுமதி கொடுப்பது குறித்து நடவடிக்கை எடுப்பார்” என்றார்.


Next Story