திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு; விரைவில் விசாரணைக்கு வருகிறது
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை,
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
திருப்பரங்குன்றம் தொகுதியில் வருகிற 19–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், வாக்குகளுக்காக பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது.
அதோடு ஒவ்வொரு கட்சியினரும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரத்தில் தங்களின் பலத்தை நிரூபிப்பதற்காக பணம் கொடுத்து மக்களை அழைத்துச் வருகின்றனர். நபர் ஒருவருக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுத்து அரசு பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள், மினி லாரிகளில் அழைத்து வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக மட்டும் முக்கிய கட்சிகள் இதுவரை ரூ.25 கோடி வரை செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் ஓட்டு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால் தேர்தல் செலவு கணக்கு என பொய்யான கணக்கை தயாரித்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கின்றனர். தேர்தல் ஆணையமும் கண்மூடித்தனமாக அதனை ஏற்றுக்கொள்கிறது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. ஆகவே திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது. விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.