சாயப்பட்டறை குடோனில் தீ விபத்து; பிளாஸ்டிக் கேன்கள் எரிந்து நாசம் - கரும்புகை பரவியதால் பொதுமக்கள் அவதி


சாயப்பட்டறை குடோனில் தீ விபத்து; பிளாஸ்டிக் கேன்கள் எரிந்து நாசம் - கரும்புகை பரவியதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 13 May 2019 11:34 PM GMT (Updated: 13 May 2019 11:34 PM GMT)

சாயப்பட்டறை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளாஸ்டிக் கேன்கள் எரிந்து நாசம் அடைந்தது. அந்த பகுதியில் கரும்புகை பரவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வீரபாண்டி,

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 47). இவர் திருப்பூர் குப்பாண்டபாளையம் பகுதியில் சாயப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் சாயப்பட்டறையில் பயன்படுத்தும் ரசாயன காலி கேன்களை கம்பெனிக்கு பின்புறமாக உள்ள குடோனில் வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென்று குடோனில் இருந்து தீப்பிடித்து கரும்புகை வெளிப்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள். திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதற்குள் குடோனில் தீ பரவி குடோன் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில் “அப்பகுதியில் சிகரெட் பிடித்துவிட்டு தீ போடப்பட்டு இருந்ததாகவும் அதன் மூலம் தீப்பற்றி இருக்கலாம் என்றும், குடோனில் வெறும் காலி ரசாயன பிளாஸ்டிக் கேன்கள் மட்டும் தீயில் எரிந்து நாசமானது. மற்ற பொருள்கள் ஏதும் இல்லாததால் பெரிய அளவில் ஏதும் சேதம் ஏற்படவில்லை” என்று தெரிவித்தனர்.

இது குறித்து சாயப்பட்டறை உரிமையாளர் திருப்பதி வீரபாண்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story