முன்னாள் ராணுவத்தினருக்கு மானியமாக வழங்கிய நிலத்தை அரசு கைப்பற்றுவதா? திருச்சி இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்பத்தினர் கோரிக்கை


முன்னாள் ராணுவத்தினருக்கு மானியமாக வழங்கிய நிலத்தை அரசு கைப்பற்றுவதா? திருச்சி இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்பத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 15 May 2019 4:15 AM IST (Updated: 15 May 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே நெய்தலூர் காலனியில் முன்னாள் ராணுவத்தினருக்கு மானியமாக வழங்கிய நிலத்தை அரசு கைப்பற்றுவதாக கூறி திருச்சி இணை இயக்குனர் அலுவலகத்தை குடும்பத்தினர் முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் காலனியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் பாலசுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்று திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக கட்டிடத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் இணை இயக்குனரை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

வீரமானியம்

நெய்தலூர் காலனியில் 1947-ம் ஆண்டுக்கு முன்பு இரண்டாம் உலகப்போரில் ராணுவத்தில் பணிபுரிந்ததற்காக மத்திய அரசால், 82 முன்னாள் ராணுவத்தினருக்கு 355 ஏக்கர் 17 சென்ட் நிலம் வீரமானியமாக வழங்கப்பட்டது. டாக்டர் ராஜன்நகர் முன்னாள் ராணுவத்தினர் நில குடியேற்ற சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு 1948-ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

1987-ம் ஆண்டுக்கு பிறகு சங்கத்தை கலைத்து விட்டு, தனிநபர் பட்டா வழங்க வேண்டி தொடர்ந்து தமிழக அரசுக்கு மனு செய்யப்பட்டது. நிலத்துக்கான நிலுவை தொகையையும் செலுத்தி வருகிறோம். மேலும் பட்டா வழங்க ஏதுவாக, கரூர் மாவட்ட கலெக்டர் பொதுப்பணித்துறைக்கு தகவல் அனுப்பினார். ஆனால், முன்னாள் ராணுவத்தினருக்கு பட்டா வழங்க பொதுப்பணித்துறை இசைவு தேவையில்லை என்று கூறி விட்டது.

நிலத்தை கைப்பற்ற முயற்சி

இந்த நிலையில், கரூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீரென 355 ஏக்கர் 17 சென்ட் நிலத்தை ஆய்வு செய்து, அரசுக்கு இந்த நிலம் தேவைப்படுகிறது. எனவே, நிலத்தை கையகப்படுத்த போகிறோம் என தெரிவித்தார். முன்னாள் ராணுவ வீரர்கள் 82 பேரும் தற்போது உயிரோடு இல்லை. அவர்களுடைய வாரிசுகள் மட்டும்தான் இருக்கிறோம். இந்த நிலத்தை நம்பிதான் பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறோம்.

இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தினால், எங்களுக்கு வேறு எந்த வாழ்வாதாரமும் இல்லை. அரசு அதிகாரிகள் மற்ற ஏரி, குளங்களைபோல, இந்த நிலமும் ஒன்றுதான் என்ற அடிப்படையில் கையகப்படுத்த முனைகிறார்கள். எனவே, தாங்கள் கரூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story