சத்தியமங்கலம் அருகே பரபரப்பு கியாஸ் அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
சத்தியமங்கலம் அருகே கியாஸ் அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே உள்ள புதுகுய்யனூரை சேர்ந்தவர் ராமு (வயது 50). இவருடைய மனைவி ஜெயமணி (47). மகள் சுதா (20).
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5½ மணி அளவில் ஜெயமணி சமைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்தார். அப்போது திடீரென சிலிண்டரையும், அடுப்பையும் இணைக்கும் குழாயில் தீப்பற்றிக்கொண்டது. உடனே ஜெயமணி, ராமு, சுதா 3 பேரும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. தீ மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் பயந்துபோய் அலறி அடித்துக்கொண்டு 3 பேரும் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தார்கள். பின்னர் உடனே சத்தி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தார்கள்.
அதன்பிறகு பாதுகாப்பு உடைகள் அணிந்துகொண்டு வீட்டுக்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள் உரிய உபகரணங்களை வைத்து, முதலில் சிலிண்டரில் இருந்து கியாஸ் வருவதை அடைத்தார்கள். பின்னர் தீயையும் அணைத்து சிலிண்டரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தார்கள்.
ராமு வீடு இருப்பது குடியிருப்புகள் நிறைந்த பகுதி. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்ததால் சிலிண்டரில் பற்றிய தீ உடனே அணைக்கப்பட்டது. இல்லை என்றால் வெடித்து பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.
தீணை முற்றிலும் அணைத்த பின்னர், சம்பவம் நடந்த வீட்டு வாசலில் கூடியிருந்த அந்தப்பகுதி பெண்களிடம் பத்திரமாக கியாஸ் சிலிண்டரை எப்படி கையாள்வது? என்று தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.