திருப்பூரில் அட்டை பெட்டி குடோனில் தீ விபத்து; 4 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்
திருப்பூரில் அட்டை பெட்டி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது. இதில் 4 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
திருப்பூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (வயது 42). இவர் திருப்பூர் எஸ்.வி. காலனி பகுதியில் வசித்து வருகிறார். மேலும், அந்த பகுதியில் அட்டை பெட்டி குடோன் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும் கார்த்தீஸ்வரன் வீட்டிற்கு சென்று விட்டார். தொழிலாளர்கள் 4 பேர் இரவும் குடோனில் தூங்கிக்கொண்டிருந்தனர். இதற்கிடையே நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென குடோனில் உள்ள அட்டை பெட்டிகளில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இதனால் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேரும் கூச்சலிட்டபடி வெளியே வந்தனர். இதற்கிடையே தீ மளமளவென குடோனில் இருந்த பொருட்கள் அனைத்திலும் பற்றி எரியத்தொடங்கியது. தொழிலாளர்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். குடோனில் இருந்து கரும்புகை வெளியேறிக்கொண்டிருந்தது.
இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் 2 வாகனத்தில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு காலை 6 மணிக்கு தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த அட்டை பெட்டிகள் மற்றும் நூல் கோன்கள் மற்றும் எந்திரங்கள் என பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பலர் வந்து குடோனை பார்வையிட்டனர். குடோனில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள்.
குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய குடோன்கள் அமைக்கக்கூடாது. இதனையும் மீறி அமைக்கப்பட்ட குடோன்கள் குறித்து தீயணைப்பு துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டு அவற்றை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார்.