என்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரிகளில் சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை செயலாளர் தகவல்


என்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரிகளில் சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 15 May 2019 4:45 AM IST (Updated: 15 May 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிங், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேர சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் தலைவர் அன்பரசு கூறினார்.

புதுச்சேரி,

சென்டாக் தலைவரும், கல்வித்துறை செயலாளருமான அன்பரசு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த காலங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நடந்தது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, சமையல் கலை கல்லூரி போன்றவற்றுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலனை கருத்தில்கொண்டு கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் நோக்கில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தும் முறையை கொண்டு வந்தோம். இப்போது தொழில்நுட்பத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம்.

இந்த கல்வியாண்டின் (2019-20) என்ஜினீயரிங், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்படுகிறது. அதன்படி இணையதளம் ( www.ce-nt-a-c-pu-du-c-h-e-r-ry.in ) மூலம் விண்ணப்பிப்பது இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வருகிற 25-ந்தேதி நள்ளிரவு வரை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். மாணவர் சேர்க்கையானது முதல்கட்டம், 2-வது கட்டம் என்று நடைபெறும். ஒருவர் தனது விருப்பத்தை வரிசைப்படுத்தி எத்தனை கல்லூரிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதற்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும். அதேபோல் பாரதியார் பல்கலைக்கூட மாணவர் சேர்க்கைக்கும் தனி அறிவிப்பு வெளியிடப்படும்.

பி.டெக். படிப்பில் 3 ஆயிரத்து 777 இடங்கள் உள்ளன. லேட்ரல் என்ட்ரிக்கு (2-ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை) 627 இடங்கள் உள்ளன. உயிரியல் சார்ந்த படிப்புகளில் 821 இடங்களும், கலை அறிவியல் படிப்புகளில் 4 ஆயிரத்து 923 இடங்களும் உள்ளன. இவை தவிர மேலும் சில படிப்புகள் என ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 651 இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் அகில இந்திய அளவிலும் சில இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். அகில இந்திய அளவிலான தரவரிசை பட்டியலிலும் நமது அரசு என்ஜினீயரிங் கல்லூரி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை எளிதில் பதிவேற்றம் செய்ய கடந்த ஆண்டு 6 கல்லூரிகளில் சேவை மையம் அமைத்திருந்தோம். இந்த ஆண்டு அரசு பள்ளிகளிலும் சேவை மையம் அமைக்கப்படுகிறது. இதன்படி 72 உயர்நிலைப்பள்ளிகள், 59 மேல்நிலைப்பள்ளிகளிலும் சேவை மையம் செயல்படும்.

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது பிளஸ்-2 தேர்வு எண்ணை குறிப்பிட்டாலே அவர்களது மதிப்பெண் குறித்த விவரம் எங்களுக்கு கிடைத்துவிடும். இதற்காக தமிழக அரசு தேர்வுத்துறையிடம் இணைப்பு பெற்றுள்ளோம். எனவே மாணவர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும்போது மதிப்பெண் பட்டியலை இணைக்க வேண்டியதில்லை.

தகுதி பட்டியலின் வரைவு பட்டியல் ஜூன் மாதம் 3-ந்தேதி வெளியிடப்படும். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 5-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் தெரிவிக்கவேண்டும். இறுதி தகுதி பட்டியல் 7-ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்டமாக மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைத்த விவரம் 10-ந்தேதி வெளியிடப்படும்.

இந்த பட்டியலின்படி மாணவர்கள் 10-ந்தேதி முதல் 17-ந்தேதிக்குள் சேர்க்கை ஆணை பெற்று கல்லூரிகளில் சென்று சேரவேண்டும். முதல் கட்ட கலந்தாய்வில் கிடைத்த பாடப்பிரிவுகளை 19-ந்தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம்.

2-வது கட்ட கலந்தாய்வு இடங்கள் ஜூன் மாதம் 21-ந்தேதி வெளியிடப்படும். அதில் இடம் பெற்ற மாணவர்கள் 28-ந்தேதிக்குள் சென்று கல்லூரிகளில் சேரவேண்டும்.

இவ்வாறு சென்டாக் தலைவர் அன்பரசு கூறினார்.

Next Story