பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல், டிரைவர் உள்பட 3 பேர் பலி - திருக்கோவிலூர் அருகே பரிதாபம்


பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல், டிரைவர் உள்பட 3 பேர் பலி - திருக்கோவிலூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 15 May 2019 4:30 AM IST (Updated: 15 May 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருக்கோவிலூர்,

திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று மதியம் ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. சென்னை வியாசர்பாடி, சாஸ்திரி நகரை சேர்ந்த சவரிமுத்து(வயது 25) என்பவர் ஆட்டோவை ஓட்டினார். அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி புவனேஷ்வரி(48), இவரது மகன் ஸ்ரீராம்(18), சகாதேவன் மனைவி தேவி(42), மதுராந்தகத்தை சேர்ந்த திருநீலகண்டன் மனைவி சுமித்ரா(35), எத்திராஜ் மனைவி மலர்(35) ஆகியோர் ஆட்டோவில் பயணம் செய்தனர்.

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் குடியிருப்பு அருகில் வந்தபோது விழுப்புரத்தில் இருந்து நல்லாபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. பஸ் மோதிய வேகத்தில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சவரிமுத்து, ஸ்ரீராம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த புவனேஷ்வரி, தேவி, சுமித்ரா உள்பட 4 பேரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சுமித்ரா பரிதாபமாக இறந்தார்.

மற்ற 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை.

விபத்து காரணமாக திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் சேதம் அடைந்த ஆட்டோவை அப்புறப்படுத்தினர். மேலும் பலியான சவரிமுத்து, ஸ்ரீராம் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் நேரில் பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை போலீசாரிடம் கேட்டறிந்தார். அப்போது திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர். விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து போலீசார் கூறும்போது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புவனேஷ்வரி, இவரது மகன் ஸ்ரீராம், தேவி ஆகிய 3 பேரும் சவரிமுத்துவின் ஆட்டோவில் திருவண்ணாமலையில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருக்கோவிலூர் வழியாக விழுப்புரம்நோக்கி வந்து கொண்டிருந்தனர். வழியில் ஆவூர் என்ற இடத்தில் மலரும், சுமித்ராவும் லிப்ட் கேட்டு ஆட்டோவில் ஏறினர். பின்னர் கண்டாச்சிபுரம் அருகே வந்தபோது ஆட்டோ மீது அரசு பஸ்மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்தனர்.

Next Story