அந்தியூர் பகுதியில் பலத்த மழை: மின்னல் தாக்கியதில் மாட்டுக்கொட்டகை எரிந்து நாசம்
அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் மாட்டுக்கொட்டகை எரிந்து நாசம் ஆனது. மேலும் தென்னை மற்றும் புளியமரத்திலும் தீப்பிடித்தது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மைக்கேல்பாளையம் பாறையூர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.
அப்போது மின்னல் தாக்கியதில் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது 55) என்பவரின் மாட்டுக்கொட்டகையையும் மின்னல் தாக்கியது. இதன்காரணமாக அந்த மாட்டுக்கொட்டகையில் தீப்பிடித்தது. அதனால் கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த மாடுகள் அலறின.
சத்தம் கேட்டு அங்கு ஓடோடி வந்த ரங்கசாமி விரைந்து செயல்பட்டு, கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த மாடுகளை பாதுகாப்பாக வெளியேற்றினார். மேலும் அவர் இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இருப்பினும் மாட்டுக்கொட்டகை முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆனது. மேலும், அங்கிருந்த மாட்டுத்தீவனங்களும் தீயில் எரிந்தது. இதேபோல் அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் இடி–மின்னலுடன் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் குருநாதசாமி கோவில் வன பிரிவில் உள்ள புளியமரம் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.