மாவட்ட செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் முத்தரசன் பேட்டி + "||" + Interview with Muthrasaran on the case of the court for insulting the Hydrocarbon project

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் முத்தரசன் பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் முத்தரசன் பேட்டி
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என திருவாரூரில், முத்தரசன் கூறினார்.
திருவாரூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் காவிரி டெல்டா, இயற்கையின் சீற்றத்தால் ஒரு புறமும், மத்திய–மாநில அரசுகளின் கொள்கைகளால் மற்றொரு புறமும் அழிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 274 இடங்களில் மிகப் பெரிய கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கி இருப்பது ரோபத்தை ஏற்படுத்துகின்ற செயலாகும்.


ஏற்கனவே இந்த திட்டத்தை எதிர்த்து போராடி கைவிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிப்பதோடு பொது பிரச்சினையாக இதனை அணுகி வருகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய போராட்டக்குழுக்களை கிராமங்கள் தோறும் அமைத்து வருகிறது. தற்போது போராட்டங்களும் ஆங்காங்கே தொடங்கியுள்ளது.


வருகிற 23–ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த உள்ளோம். அண்டை மாநிலமான புதுச்சேரியில், முதல்–அமைச்சர் நாராயணசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் தமிழக முதல்–அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அமைச்சர்கள் இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் காப்பதன் மூலம் இந்த திட்டத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.

எனவே இந்த திட்டத்தை எதிர்த்து அடுத்த மாதம்(ஜூன்) மக்களை ஒன்று திரட்டி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். மோடி அரசு, தமிழகத்தை வெறுப்பான மனநிலையிலேயே பார்க்கிறது. அதனால் தமிழகத்தின் மக்கள் விரும்பாத திட்டங்களை திணிக்க நினைக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு அங்கு நடந்த அசம்பாவிதம் போல ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் காவிரி டெல்டாவில் நடக்க வேண்டுமென எதிர்பார்க்கிறதோ என்கின்ற சந்தேகம் எழுகின்றது.


எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். ஜூன் 12–ந் தேதி நெருங்கிவிட்ட நிலையில் சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க வேண்டிய நிலையில் அணையில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் இன்னும் கூட்டப்படாமல் உள்ளது. அந்த ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை. மாநில அரசும் இது குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்கிறது.

கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைத்து தூர்வாரும் பணிகளை செய்ய பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கவலை அளிப்பதாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது நடிகர் கமல்ஹாசன் பேசியது ஒரு மிகப்பெரிய பிரச்சினை அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், முன்னாள் எம்.பி. செல்வராசு, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.