மல்லிகார்ஜுன கார்கே முதல்-மந்திரி ஆகியிருக்க வேண்டும் என பேச்சு: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் ஆட்சி தொடருமா?


மல்லிகார்ஜுன கார்கே முதல்-மந்திரி ஆகியிருக்க வேண்டும் என பேச்சு: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் ஆட்சி தொடருமா?
x
தினத்தந்தி 17 May 2019 5:00 AM IST (Updated: 17 May 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

மல்லிகார்ஜுன கார்கே முதல்-மந்திரி ஆகியிருக்க வேண்டும் என்று பேசிய விவகாரம் தொடர்பாக சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் நிலவும் விரிசலால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கர்நாடகத்தில் ஆட்சி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது.

ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர், துணை முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். இந்த ஆட்சி அமைந்து வருகிற 23-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத், சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கடும் கோபம் அடைந்த சித்தராமையா, எச்.விஸ்வநாத்தை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

சித்தராமையா மற்றும் எச்.விஸ்வநாத்தின் கருத்து மோதல் கூட்டணிக்குள் விரிசலை உண்டாக்கியதுடன் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி சித்தராமையாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் எங்கள் தரப்பில் இருந்தும் இனி தவறான கருத்துகள் எதுவும் வராது என்றும் உறுதிபட கூறினார். இதையடுத்து குமாரசாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று சித்தராமையா கூறினார். இதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சிஞ்சோலி தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.

இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துக்கொண்டு பேசுகையில், “மல்லிகார்ஜுன கார்கே நீண்ட காலத்திற்கு முன்பே முதல்-மந்திரி ஆகியிருக்க வேண்டும். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி அரசில் அவர் முதல்-மந்திரியாகி இருக்க வேண்டும். ஆனால் கட்சி மேலிடத்தின் முடிவை நான் ஏற்கிறேன் என்று பேசினார்.

அதாவது சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசி வரும் நிலையில் சித்தராமையாவை கட்டுப்படுத்தும் வகையில் குமாரசாமி இந்த கருத்தை கூறியதாக கூறப்பட்டது. இந்த கருத்தால் கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் விரிசல் இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டது.

இந்த நிலையில் குமாரசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று காலை ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், “குமாரசாமி கூறியது உண்மை தான். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி மட்டுமல்ல, அதைவிட பெரிய பதவி கிடைக்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் முதல்-மந்திரி பதவிக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களில் எச்.டி.ரேவண்ணாவும் ஒருவர். அனைத்திற்கும் காலம் கூடி வர வேண்டும்” என்றார்.

அதாவது எச்.டி.ரேவண்ணா முதல்-மந்திரி பதவிக்கு தகுதியானவர் என மறைமுகமாக சித்தராமையா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சித்தராமையாவின் இந்த கருத்துக்கு குமாரசாமி தனது டுவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.

அதில், “மாநிலத்தின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்-மந்திரியாகி இருக்க வேண்டும் என்று கூறினேன். அவரது நீண்ட அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் என் மனதின் ஆழத்தில் இருந்து இந்த கருத்தை தெரிவித்தேன். இதற்கு அரசியல் சாயம் பூசி தவறான அர்த்தம் கற்பிப்பது ஆரோக்கியமானது அல்ல.

நான் கூறிய கருத்து மூலம் அரசியல் ஆதாயம் பெறும் கீழ்மட்ட எண்ணம் எனக்கு கிடையாது. மல்லிகார்ஜுன கார்கே கட்சி, சாதி எல்லாவற்றையும் மீறிய தலைவர் என்பதை நாம் மறக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைத்திருக்க வேண்டும் என்று பேசிய விவகாரத்தில் சித்தராமையா மற்றும் குமாரசாமி இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருப்பது, கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தராமையா ஆசி இருக்கும்வரை கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று குமாரசாமி கூறி வருகிறார். இப்போது சித்தராமையாவே, குமாரசாமிக்கு எதிராக கருத்து கூறி தனது கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். அதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த கூட்டணி ஆட்சி தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Next Story