திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது


திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 17 May 2019 4:45 AM IST (Updated: 17 May 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் போலி டாக்டராக நடித்தது பற்றியும் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.

லால்குடி,

திருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயகர் நகர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சக்கரவர்த்தி (வயது 34). சிவில் என்ஜினீயர். திருமணமான இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர், தன்னை டாக்டர் என்று கூறியும், திருமணம் ஆகாதவர் என்றும் அஜய், விதுட், விஜயகுமார், கிரிஜா சரவணன் என பல பெயர்களில் ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் போலியாக பதிவு செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம் நம்பர்-1 டோல்கேட் பிச்சாண்டார் கோவில் வி.என்.நகரை சேர்ந்த செல்வராஜ் மகள் தாமரைச்செல்வி (33). கணவரை இழந்த இவர், புள்ளம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரும், ஆன்லைனில் திருமண பதிவு செய்துள்ளார்.

தான் ஒரு டாக்டர் என்று சக்கரவர்த்தி திருமண பதிவு செய்ததால் தாமரைச்செல்விக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சக்கரவர்த்தி முதல் திருமணம் செய்ததை மறைத்து, தாமரைச்செல்வியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறினார். அதனை நம்பிய தாமரைச்செல்வி அவரிடம் நெருங்கி பழகினார். இதன்மூலம், ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் வரை தாமரைச்செல்வியிடம் இருந்து சக்கரவர்த்தி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் திருமணம் பற்றி சக்கரவர்த்தி எதுவும் பேசாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் சக்கரவர்த்தியின் நடவடிக்கைகளில் டாக்டர் தாமரைச்செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரிக்கையில், சக்கரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், அவர் போலி டாக்டர் என்ற விவரமும் தாமரைச்செல்விக்கு தெரியவந்தது.

தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாமரைச்செல்வி, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆனால், விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதனை தொடர்ந்து முதல் திருமணத்தை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய சக்கரவர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில், தாமரைச்செல்வி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீசார் திருவண்ணாமலையில் உள்ள வீட்டில் இருந்த சக்கரவர்த்தியை கைது செய்தனர். மேலும் சக்கரவர்த்தியின் மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கார் டிரைவர் முருகன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சக்கரவர்த்தியும், முருகனும் நேற்று லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பிரசாத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜராகி வாதாடிய, பெற்றோர் அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் ஜெயந்திராணி கூறுகையில், ‘சக்கரவர்த்தி டாக்டருக்கு படித்தது போல் போலியான ஆவணங்கள் தயாரித்து உள்ளார். மேலும் அவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டரையும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உள்ளார். பெண் டாக்டர்களை குறி வைத்தே அவர் மோசடிகளில் இறங்கி உள்ளார். இந்த வழக்கில் திருமண பதிவுகள் மோசடிக்கு சில ஆன்லைன் நிறுவனங்கள் உடந்தையாக இருந்திருப்பதால் அவற்றை முறைப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறி உள்ளேன். இந்த வழக்கில் ஜூன் 4-ந் தேதிக்குள் விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது’ என்றார். 

Next Story