கூடலூர் அருகே, காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தாலுகாவுக்குட்பட்ட புளியாம்பாரா அருகே கோழிக்கொல்லி பகுதியை சேர்ந்த தொழிலாளி நமச்சிவாயம் (வயது 55) என்பவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்து கத்தரித்தோடு வழியாக நாடுகாணிக்கு சென்றார்.
பின்னர் இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கத்தரித்தோடு பகுதியில் நடந்து சென்ற போது எதிரே காட்டு யானை ஒன்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் வந்த வழியாக நமச்சிவாயம் திரும்பி ஓடினார். ஆனால் அதற்குள் காட்டு யானை அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
நமச்சிவாயத்தின் அலறல் சத்தம் கேட்ட கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். மேலும் அந்த பகுதி இருட்டாக இருந்ததால்காட்டு யானை எந்த பகுதியில் நிற்கிறது என தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அடையாளம் கண்ட கிராம மக்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பலத்த காயங்களுடன் புதருக்குள் கிடந்த நமச்சிவாயத்தை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் பெருந்தல்மன்னா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தேவாலா வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story