கடலூர் முதுநகர் அருகே விபத்து, மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி சாவு -தம்பிக்கு காது குத்த கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்


கடலூர் முதுநகர் அருகே விபத்து, மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி சாவு -தம்பிக்கு காது குத்த கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 7:03 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி பலியானாள். தம்பிக்கு காது குத்த கோவிலுக்கு சென்ற போது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் முதுநகர்,

சிதம்பரம் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது 34). காய்கறி வியாபாரி. இவரது மனைவி அபிராமி (28). இவர்களுக்கு அஸ்மிதா (6) என்கிற மகளும், அஸ்வின் (4) என்கிற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மகன் அஸ்வினுக்கு கடலூர் முதுநகர் அருகே உள்ள குடிகாடு பச்சைவாழியம்மன் கோவிலில் மொட்டை அடித்து காது குத்த பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக நேற்று காலை அவர்கள் சிதம்பரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அஸ்மிதாவை மட்டும் அழைத்துக்கொண்டு முதுநகர் நோக்கி வந்தனர். அஸ்வின் உறவினர்களோடு வேனில் வந்தான்.

இதற்கிடையே குமரன், அபிராமி, அஸ்மிதா ஆகியோர் கடலூர் பூண்டியாங்குப்பம் அருகே வந்தனர். அப்போது வைரங்குப்பத்தை சேர்ந்த சித்திரைவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக குமரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் குமரன், அபிராமி, அஸ்மிதா ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். உடன் அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி அஸ்மிதா பரிதாபமாக உயிரிழந்தாள். படுகாயமடைந்த குமரன், அபிராமி ஆகிய 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சித்திரைவேலும் கீழே விழுந்து காயமடைந்தார். அவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பிக்கு மொட்டை அடித்து காது குத்த சென்றபோது நடந்த விபத்தில் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story