கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீச்சு: புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கண்டனம்
கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீசப்பட்டதற்கு புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டபோது காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேதான் நாட்டின் முதல் இந்து தீவிரவாதி என்று தெரிவித்தார். அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையை அவர் மீண்டும் எடுத்துக்கூறியதன் மூலம் மக்கள் அச்சம்பவம் குறித்து விழிப்புணர்வு பெற்றுள்ளனர். பொதுவாக அரசியல்வாதிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதையும் மறைக்க கூடியவர்களாகவும், எந்த வரலாற்று உண்மை சம்பவத்தையும் திரித்து கூறுபவர்களாகவும் உள்ளனர்.
கமல்ஹாசன் உண்மையை எடுத்துக்கூறியதால் நமது வாக்கு வங்கி சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இந்தியாவில் இந்து தீவிரவாதம் என எதுவும் கிடையாது. ஒரு இந்து என்றுமே தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் இந்து இல்லை என்று பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
உண்மையையும், யதார்த்தத்தையும் புரிந்துகொள்ள முடியாத சில கட்சிகளின் தொண்டர்கள் அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தபோது செருப்புகளையும், முட்டைகளையும் வீசியுள்ளனர். அதுவும் பேசி முடிந்து கீழே இறங்கும்போது செய்துள்ளனர். இதன் மூலமே அவர்கள் நெஞ்சுக்கு நேராக எதையும் செய்ய தைரியமில்லாதவர்கள் என்பது உறுதியாகிறது. கோழைத்தனமான இச்செயலை புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் ஜனநாயக நாட்டில் நடந்த வரலாற்று உண்மையை எடுத்து கூறியதற்காக அவரை நாகரீகமற்ற வார்த்தைகளால் திட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கூறியுள்ளார்.