அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை: தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து


அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை: தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து
x
தினத்தந்தி 19 May 2019 4:30 AM IST (Updated: 18 May 2019 10:07 PM IST)
t-max-icont-min-icon

பரமத்தி வேலூரில் நடைபெற இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பரமத்தி வேலூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்த தொகுதியின் அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் பரமத்திவேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற இருந்தது.

இந்த கூட்டத்திற்காக காலை 9 மணி முதல் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கூட்டம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு வந்தனர். கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொள்ள இருந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அ.தி.மு.க.வினர் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்துவதாகும், அதனை தடுக்கக் கோரியும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருமண மண்டபத்தின் முன்பு கூடியிருந்த 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தை ரத்து செய்யாவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் திருமண மண்டப வளாகத்திற்கு வந்த பரமத்தி வேலூர் தாசில்தார் ருக்மணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அ.தி.மு.க.வினரிடம் கூட்டத்தை ரத்து செய்யுமாறு கூறினர். இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தை ரத்து செய்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கூட்டம் நடைபெற இருந்த திருமண மண்டபம் அருகில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story