ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: பெங்களூரு அழகுகலை நிபுணர் கைது


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: பெங்களூரு அழகுகலை நிபுணர் கைது
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 5:13 PM GMT)

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என 9 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் விசாரணையில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கும்பல் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே புரோக்கர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகளின் பெற்றோரை கண்டறிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 4,300 குழந்தைகள் பிறந்து இருப்பதும், அவர்களில் சுமார் 260 குழந்தைகள் பிறப்பு சான்றிதழில் உள்ள முகவரியில் இல்லை என்பதும் தெரியவந்தது. எனவே அந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளார்களா? இல்லை எனில் அவர்களின் பெற்றோர் குடிபெயர்ந்து விட்டார்களா? என சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்கள் அருள்சாமி, ஹசீனா உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைகள் விற்பனை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் ரேகாவுக்கு (வயது40) தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் ஈரோட்டை சேர்ந்த புரோக்கர் அருள்சாமி மூலம் கொல்லிமலையில் பிறந்த 2 குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து இருப்பதும் தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேகாவை நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி வருகிற 31-ந் தேதி வரை ரேகாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அவர் சேலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

புரோக்கர் ரேகாவுடன் குழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. கருமுட்டை தானம் பெற்றுக்கொடுப்பதில் ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்களுக்கும், ரேகாவுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே குழந்தைகளையும் விற்பனை செய்து இருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை நாமக்கல் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த புரோக்கர்கள் தான் கைது செய்யப்பட்டு வந்தனர். ஆனால் முதல்முறையாக வெளிமாநிலத்திலும், அதாவது கர்நாடகாவிலும் குழந்தை விற்பனை செய்யப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டு, பெண் புரோக்கராக செயல்பட்ட அழகுகலை நிபுணர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story