ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2019 4:45 AM IST (Updated: 19 May 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டி அருகே விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி,

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதால் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சேவை சங்கங்கள் போராடி வருகின்றன. இதனால் தற்காலிகமாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மத்திய அரசின் புதிய எண்ணெய் கண்டுபிடிப்பு கொள்கையின்படி மீத்தேன், ஷேல், டைட்கேஸ், உள்ளிட்ட பல வகை எண்ணெய் எரிபொருள் எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் மரபு சாரா எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு விண்ணப்பித்து இருந்தது.

இதனை ஏற்று அந்த நிறுவனம், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும், சுற்றுச்சூழல் அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை அறிக்கை தாக்கல் உள்பட 32 நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்ற நிலையில் மத்திய அரசு டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாக விவசாயிகள், அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருக்களார், ராயநல்லூர், நான்காம்சேத்தி, சேரன்குளம், நெம்மேலி, கருக்கங்குடி, கருணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், மேலராதாநல்லூர் வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழப்பெத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம் உள்பட 247 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூரில் விவசாயிகள் பருத்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மாசிலாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வையாபுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், துணைச்செயலாளர் ராஜா, ஒன்றிய தலைவர் ஜவஹர், செயலாளர் மகாலிங்கம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பாலு, செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் சுந்தர், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன், ராயநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் கருணாநிதி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் குருமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் ராயநல்லூரை சேர்ந்த மணிமாறன் தலைமையில் 65 பேர் கொண்ட போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் உள்ள 32 ஊராட்சிகளிலும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும், வருகிற ஜூன் 1-ந் தேதி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், விவசாய சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியது:-

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம் என அறிவித்திருந்த நிலையில், தேர்தல் முடிந்தவுடன் இந்த திட்டத்தை செயல்படுத்துவது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஆகவே காவிரி டெல்டா மாவட்டத்தையும், தமிழக விவசாயிகளையும் பாதுகாத்திட ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் மாதத்தில் அனைத்து தரப்பு மக்கள், விவசாயிகளை திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story