சத்தி அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி


சத்தி அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 19 May 2019 3:30 AM IST (Updated: 19 May 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை தொழிலாளி ஒருவர் கழுத்தை அறுத்து கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சத்தியமங்கலம், 

சத்தி அருகே உள்ள சிக்கரசம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

லட்சுமி சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் செயல்பட்டு வரும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிக்கரசம்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே லட்சுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் லட்சுமியை கொடூரமாக கொலை செய்தது யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட லட்சுமி வேலை செய்த அதே கம்பெனியில், கோபி கள்ளிப்பட்டியை சேர்ந்த தாமோதரன் (30) என்பவருடைய மனைவி பொன்னுத்தாயி (29) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

ஒரே கம்பெனியில் வேலை பார்த்ததால் லட்சுமியும், பொன்னுத்தாயும் தோழி ஆனார்கள். அதனால் பொன்னுத்தாயின் கணவர் தாமோதரனுக்கும் லட்சுமி அறிமுகம் ஆனார்.

சில நாட்களிலேயே தாமோதரனும், லட்சுமியும் நெருங்கி பழக தொடங்கினார்கள். இதனால் அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் உருவானது. அடிக்கடி லட்சுமியின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்தார்கள். தாமோதரன் லட்சுமிக்கு பண உதவியும் செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இவர்களின் கள்ளக்காதல் பொன்னுத்தாயிக்கு தெரிய வந்தது. உடனே அவர் சொந்த பந்தங்களுடன் சேர்ந்து கணவரை எச்சரித்தார். லட்சுமியையும் இனிமேல் தாமோதரனிடம் பழக கூடாது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து லட்சுமி தாமோதரனை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் அடிக்கடி தாமோதரன் லட்சுமியை சந்தித்து என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? என்று கூறி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார். ஆனால் லட்சுமி அதற்கு மறுத்துள்ளார். இதனால் தாமோதரன் ஆத்திரமடைந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் லட்சுமி கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டு பஸ்சில் சிக்கரசம்பாளையம் வந்து இறங்கி, வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த தாமோதரன் லட்சுமியை தன்னுடன் வா என்று அழைத்தார். ஆனால் லட்சுமி வரமுடியாது என்று உறுதியாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாமோதரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லட்சுமியின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள தாமோதரனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story