கும்பகோணம் பகுதியில் வயலை உழவு செய்து தண்ணீருக்கு காத்திருக்கும் விவசாயிகள்


கும்பகோணம் பகுதியில் வயலை உழவு செய்து தண்ணீருக்கு காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 7:36 PM GMT)

கும்பகோணம் பகுதியில் வயலை உழவு செய்து விவசாயிகள் தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள். மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுமா? என்ற கேள்வியும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பல லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். அதனை தொடர்ந்து குறுவை சாகுபடி பணிகள் தீவிரம் அடையும்.

மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக விவசாயிகள் தங்கள் வயலை உழுது, நாற்றங்கால் அமைத்து குறுவை சாகுபடி செய்ய தயார் நிலையில் இருப்பார்கள். 30 நாட்கள் வரை குறுவை நெல் நாற்றுகளை நாற்றங்காலில் வைத்து பராமரிப்பு செய்து, அதன் பின்னர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கிடைத்தவுடன் வயலில் நடுவார்கள்.

கேள்விக்குறி

கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவது இல்லை. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். மேட்டூர் அணையில் தற்போது 50 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி மோட்டார் பம்பு செட் வைத்திருக்கும் விவசாயிகள், ஆற்றில் இருந்து தண்ணீர் கிடைக்கா விட்டாலும் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். ஆனால் ஆற்றுப்பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டாவது மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுமா? என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் கும்ப கோணம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக தங்கள் வயலை உழவு செய்து விட்டு தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தன் கூறியதாவது:-

தண்ணீர் பெற்றுத்தர வேண்டும்

ஒவ்வொரு ஆண்டும் ஆற்றில் தண்ணீர் வரும் என்று நம்பி குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் எதிர்பார்த்தபடி தண்ணீர் கிடைப்பதில்லை. பயிர்கள் கருகி வீணாகின்றன.

குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டால்தான் சாகுபடி பணிகள் சீராக நடைபெறும். எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழகத்துக்கு உரிய காவிரி தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story