அரியாங்குப்பத்தில் வியாபாரியை தாக்கிய 3 பேர் கைது


அரியாங்குப்பத்தில் வியாபாரியை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 May 2019 10:15 PM GMT (Updated: 18 May 2019 8:11 PM GMT)

கடையில் புகுந்து வியாபாரியை தாக்கிய கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 39). இவர் அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே உள்ள காய்கறி கடையில் வேலை செய்து வரும் முத்து (வயது 23) என்ற வாலிபர் வரதராஜின் மனைவியை பார்த்து கேலி கிண்டல் செய்தாராம்.

இது குறித்து வரதராஜின் மனைவி தனது கணவரிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து வரதராஜ் இதுகுறித்து முத்துவிடம் கேட்டுள்ளார். இதனால் வாய்த்தகராறு முற்றிய நிலையில் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதி வியாபாரிகள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வரதராஜ் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது முத்து தன்னுடைய நண்பர்கள் சிலரை கும்பலாக அழைத்து வந்தார். அவர்கள் வரதராஜின் கடைக்குள் புகுந்து வரதராஜை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து வரதராஜ், அரியாங்குப்பம் வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் நலச் சங்கத்தினரிடம் முறையிட்டார். வியாபாரிகள் சங்கத்தினர் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முத்து மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று அரியாங்குப்பம் பஸ் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்த முத்து, அவரது கூட்டாளிகள் மணிகண்டன் மற்றும் ஒருவர் உள்பட 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.இந்த வழக்கில் தப்பி ஓடிய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story