“பிணவறையில் தந்தை-மணவறையில் மகள்” துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்


“பிணவறையில் தந்தை-மணவறையில் மகள்” துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்
x
தினத்தந்தி 18 May 2019 10:15 PM GMT (Updated: 18 May 2019 9:20 PM GMT)

திருச்சி அருகே மருத்துவமனையில் இறந்த தனது தந்தையின் உடலை பிணவறையில் வைத்துவிட்டு, அவர் இறந்த தகவலை மறைத்து, தனது தங்கையை மணவறையில் ஏற்றி அவருடைய திருமணத்தை வாலிபர் ஒருவர் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 67). இவருடைய மனைவி வசந்தா (51). இவர்களின் மகன் உதயகுமார் (40). மகள் கனிமொழி (31). இந்த நிலையில் நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் ராஜகுரு என்பவருக்கும், கனிமொழிக்கும் திருமணம் செய்ய பெரியவர்கள் பேசி முடித்தனர்.

அதன்படி அவர்களுக்கு மே 17-ந் தேதி திருமணம் நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து லால்குடி வடக்கு அய்யன் வாய்க்கால் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை அவர்கள் பதிவு செய்தனர். பின்னர் திருமண அழைப்பிதழ் அச்சடித்து மணமக்களின் குடும்பத்தினர் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர்.

தந்தை மரணம்

இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மணமகளின் தந்தை நடராஜனுக்கு திடீரென தலையில் கட்டி ஏற்பட்டது. இதனால் அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு துணையாக அவருடைய மகன் உதயகுமார் ஆஸ்பத்திரியில் இருந்தார். அதே நேரம் கனிமொழியின் திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி காலை 11 மணிக்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை இறந்த தகவல் உறவினருக்கு தெரிந்தால், மறுநாள் மணக்கோலம் காணவேண்டிய தனது தங்கையின் திருமணம் நின்றுவிடும் என்று கருதிய உதயகுமார், துக்கத்தை தனக்குள் வைத்துக்கொண்டு, இதுபற்றி யாரிடமும் கூறவில்லை.

பிணவறையில் தந்தை-மணவறையில் மகள்

மேலும் இதுபற்றி டாக்டர்களிடம் கூறி, தனது தந்தையின் உடலை பிணவறைக்கு அனுப்பிவைத்தார். பின்னர் அவர், தங்கையின் திருமணத்துக்கு செல்லாமல் வழக்கம் போல் ஆஸ்பத்திரியிலேயே தந்தைக்கு துணையாக இருப்பதுபோல் இருந்துவிட்டார். நேற்று முன்தினம் காலை ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி கனிமொழிக்கும், ராஜகுருவுக்கும் திருமணம் நடைபெற்றது.

ஆஸ்பத்திரி பிணவறையில் தந்தை இருப்பது தெரியாமல் திருமண மண்டப மணவறையில் மணக்கோலத்தில் கனிமொழி உட்கார்ந்து இருந்தார். காலை 10 மணிக்கு அவர்களின் திருமணம் முடிந்து அனைத்து சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெற்றன. அனைத்து சுபநிகழ்ச்சியும் நிறைவடைந்ததும், உதயகுமார் தனது உறவினர் ஒருவர் மூலம் திருமண மண்டபத்தில் உள்ளவர்களுக்கு மணமகளின் தந்தை நடராஜன் இறந்து விட்ட செய்தியை கூறினார்.

நெகிழ்ச்சி

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த புதுப்பெண், அவரது தாய் மற்றும் உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். புதுமாப்பிள்ளையின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். திருமண விழாவுக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். இதைத்தொடர்ந்து அனைவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று, நடராஜனின் உடலை ஊருக்கு கொண்டு சென்றனர்.

அன்று மாலையே நடராஜனின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதில் மணக்கோலத்தில் புதுமண தம்பதியினர் கலந்து கொண்டனர். தந்தை இறந்த தகவலை மறைத்து, சகோதரியின் திருமணத்தை அண்ணன் நடத்திவைத்த சம்பவம் அந்த கிராமத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story