எரிவாயு எடுக்க எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் மன்னார்குடி அருகே பரபரப்பு


எரிவாயு எடுக்க எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் மன்னார்குடி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 20 May 2019 4:30 AM IST (Updated: 20 May 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சுந்தரக்கோட்டை,

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு இடங்களில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வயலில் கசியும்போது விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

எனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் வகையிலான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வயலில் இறங்கி போராட்டம்

இந்த நிலையில் மன்னார்குடி அருகே சவளக்காரன் ஊராட்சிக்கு உட்பட்ட அரசூர் கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் எரிவாயு எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் நேற்று அரசூர் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

பரபரப்பு

மன்னார்குடி பகுதியில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. விவசாயிகளின் திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story