ராமேசுவரம் கோவிலில் பல ஆண்டுகளாக முழுமை பெறாத 2-ம் பிரகாரம்


ராமேசுவரம் கோவிலில் பல ஆண்டுகளாக முழுமை பெறாத 2-ம் பிரகாரம்
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 8:50 PM GMT)

ராமேசுவரம் கோவிலில் பல ஆண்டுகளாக 2-ம் பிரகாரம் முழுமை பெறாமல் உள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தின் பழமையும்,புகழும் ராமாயண கதையோடு நெருங்கிய தொடர்புடையது. இத்திருக்கோவில் காசிக்கு நிகரான யாத்திரை தலமாக முக்கியத்துவம் பெற்றது.காசியில் தொடங்கப்பட்ட யாத்திரை ராமேசுவரத்தில் மூர்த்தியை வழிபட்ட பின்னர் முடிவு பெறுகிறது என்பது ஐதீகம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேசுவரம் கோவிலில் பல ஆண்டுகளுக்கு மேலாக 2-ம் பிரகாரம் இன்றுவரை முழுமை பெறாமல் உள்ளது. 1907-1925-ம் ஆண்டுகளுக்கிடையில் கோவிலில் முதல் பிரகாரம் கட்டப்படும் போதே இரண்டாம் பிரகாரத்திலும் திருப்பணிகள் தொடங்கப்பட்டன.அப்போதே சுண்ணாம்பு கற்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு கருங் கற்களினால் பிரகாரம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

சில ஆண்டுகள் திருப்பணிகள் நிறுத்தப்பட்டு அதன்பின்னர் 1961 முதல் 1985-ம் ஆண்டு வரை 2-ம் பிரகாரத்தில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வடக்கு திசையில் உள்ள ஒரு பகுதியை தவிர கிழக்கு,மேற்கு,தெற்கு பகுதிகளிலும் முழுமையாக கருங்கற்களினால் ஆன தூண்கள் அமைக்கப்பட்டு 2-ம் பிரகாரத்தில் திருப்பணிகள் நிறைவடைந்தன.

வடக்கு பகுதியில் ஒரு பகுதியை தவிர மற்ற இடங்களில் கருங்கற்களினால் தூண்கள் வைக்கப் பட்டு பிரகாரமாக காட்சிஅளிக்கிறது.இந்த 2-ம் பிரகாரம் வழியாக தான் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் செல்கின்றனர்.பல வருடங்களாக முழுமை பெறாமல் உள்ள ராமேசுவரம் கோவில் 2-ம் பிரகாரத்தில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு இந்து சமய அற நிலையத்துறையும் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே இதற்கு உடனடியாக இந்து சமய அற நிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
  • chat