சேலம் ஆயுதப்படை மைதானத்தில் மாடியில் இருந்து விழுந்து பயிற்சி போலீஸ்காரர் படுகாயம்


சேலம் ஆயுதப்படை மைதானத்தில் மாடியில் இருந்து விழுந்து பயிற்சி போலீஸ்காரர் படுகாயம்
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 9:20 PM GMT)

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் மாடியில் இருந்து விழுந்து பயிற்சி போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பெரியப்பட்டி சிட்லூர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் பிரபு (வயது 26). இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீஸ் பணியில் சேர்ந்தார். இவரைப்போல் புதியதாக போலீஸ் பணிக்கு தேர்வானவர்கள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் தங்கியிருந்து தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இந்த பயிற்சியில் பிரபுவும் கலந்து கொண்டு பங்கேற்று வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் பயிற்சி காவலர்கள் தங்களின் துணிகளை துவைத்து காய வைத்துக் கொண்டு இருந்தனர். பிரபுவும் தனது துணியை துவைத்து மாடியில் காயவைக்க சென்றதாக கூறப்படுகிறது.

கீழே விழுந்து காயம்

இந்த நிலையில் மாடியில் இருந்து திடீரென்று கால் தவறி பிரபு கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் பயிற்சி முகாமில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் பிரபு செல்போன் பயன்படுத்தியதால் மேல் அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயிற்சி போலீஸ்காரர் பிரபு மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது அதிகாரிகளின் தொந்தரவால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அஸ்தம்பட்டி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story