போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார்


போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார்
x
தினத்தந்தி 20 May 2019 10:15 PM GMT (Updated: 20 May 2019 6:33 PM GMT)

மயிலாடுதுறை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய ஆட்டோ டிரைவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரை அடித்துக்கொன்று உடலை தூக்கில் தொங்க விட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மறையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 45). பனந்தோப்பு தெருவை சேர்ந்தவர் சங்கர். நண்பர்களான இவர்கள் இருவரும் ஆட்டோ டிரைவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வகுமார், சங்கரிடம் செலவுக்கு கடனாக ரூ.100 கேட்டுள்ளார். அப்போது சங்கர், தனது ஆட்டோவில் உள்ள ஒரு பெட்டியில் இருந்து ரூ.100 எடுத்து கொடுத்துள்ளார்.

பின்னர் சங்கர், தனது வேலைகளை முடித்துவிட்டு ஆட்டோவில் உள்ள பெட்டியில் ஏற்கனவே தான் வைத்து இருந்த பணத்தை பார்த்துள்ளார். அப்போது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மொத்த பணமும் திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்து சங்கர், சந்தேகத்தின் பேரில் செல்வகுமார் மீது மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், செல்வகுமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை இந்திராநகர் பின்புறம் உள்ள மயான பகுதி அருகே ஒரு மரத்தில் நேற்று முன்தினம் செல்வகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த செல்வகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து பார்த்தனர்.

பின்னர் போலீசார், செல்வகுமாரை அடித்துக்கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக கூறி நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை சித்தர்காடு மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் மலர்விழி, துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது செல்வகுமார் விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதை போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிடலாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து செல்வகுமாரின் மனைவி மோகனாம்பாள்(35) மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story