நாகையில் கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டுமான பணி: ஆபத்தை உணராமல் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள்


நாகையில் கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டுமான பணி: ஆபத்தை உணராமல் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள்
x
தினத்தந்தி 21 May 2019 4:15 AM IST (Updated: 21 May 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர். விரைவில் பாலம் கட்டும் பணியை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆகிய ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளன. இதனால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாகைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நாகையில் இருந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து தோணித்துறை ரோடு, அக்கரைப்பேட்டை, தெற்கு பொய்கைநல்லூர் வழியாகவும் வேளாங்கண்ணிக்கு செல்லலாம். நாகை தோணித்துறை சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள், அதனை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் மற்றும் வேளாங்கண்ணிக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த ரெயில்வே கேட்டை தாண்டி தான் செல்ல வேண்டும். ரெயில்கள் செல்லும் போது தோணித்துறை ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படும். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து தோணித்துறை சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு ரெயில்வே துறை சார்பில் சுமார் ரூ.13 கோடி மதிப்பில் ரெயில்வேகேட் பகுதியில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. மீதி பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்ட வேண்டும். ஆனால் நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ரெயில்வே கேட் பூட்டி இருக்கும் போது நீண்ட நேரம் காத்திருப்பவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களுடன் கேட்டுக்குள் புகுந்து ஆபத்தை உணராமல் செல்கின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தோணித்துறையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் ஒதுக்கப்பட்ட நிதியும் எங்கே சென்றது என தெரியவில்லை. இந்த சாலை வழியாக தான் மீனவர்கள் கடலில் பிடித்து வரப்படும் மீன்களை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சரக்கு ரெயில் செல்லும் போது அரை மணி நேரத்துக்கும் மேலாக ரெயில்வே கேட் மூடப்படுகிறது.

இதனால் சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நாகை பழைய பஸ் நிலையம் மற்றும் முதலாவது கடற்கரை சாலையில் வரிசையாக காத்து கிடக்கின்றன. எனவே, இந்த தோணித்துறையில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை திட்ட பொறியாளர் கூறுகையில்:-

நாகை தோணித்துறை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு சுமார் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரெயில்வே துறை சார்பில் ரெயில்வே கேட் இருக்கும் பகுதியில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் மீதி உள்ள பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது நில உரிமையாளர்கள் அதிக விலை கேட்டார்கள். இதுதொடர்பாககடந்த மார்ச் மாதம் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story