முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 May 2019 4:30 AM IST (Updated: 21 May 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

2019-20-ம் கல்வி ஆண்டில் பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் வேலூர் சத்துவாச்சாரியில் தொடங்கப்பட உள்ளது. இந்த விளையாட்டு மையத்தில் சேரும் பொருட்டு 7, 8, 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 வகுப்பு பயில உள்ள விளையாட்டு திறமை மிக்க மாணவ- மாணவிகளும், கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு பயில உள்ள விளையாட்டு திறமை மிக்க மாணவ- மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பதாரர்களின் தகுதியின்படி பளுதூக்குதல் விளையாட்டில் தேர்ந்தெடுக்கப்படுவர். மாநில அளவில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட வர்கள், பதக்கம் பெற்றவர்கள், மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள், ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த மையத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ளது. மேற்படி விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக ஆன்லைனில் பூர்த்தி செய்தல் வேண்டும். விண்ணப்ப படிவத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் வருகிற 29-ந் தேதி ஆகும். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்குதல் விளையாட்டு மேம்பாட்டு மையத்தில் வருகிற 30-ந் தேதி காலை 8 மணிக்கு மாநில அளவிலான தேர்வு நடத்தப்பட உள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய பளுதூக்கும் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story