குன்னம் அருகே பஸ் வசதி இன்றி கிராம மக்கள் அவதி தார்ச்சாலை வசதி ஏற்படுத்திதர வலியுறுத்தல்


குன்னம் அருகே பஸ் வசதி இன்றி கிராம மக்கள் அவதி தார்ச்சாலை வசதி ஏற்படுத்திதர வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 May 2019 10:45 PM GMT (Updated: 20 May 2019 7:59 PM GMT)

குன்னம் அருகே நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் ஆகிய 2 கிராமங்களில் சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

குன்னம்,

ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியிலும், அரியலூர் மாவட்ட பகுதியின் அருகிலும் அமைந்துள்ளது நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் கிராமங்கள். இந்த 2 கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அரியலூர் மற்றும் பெரம்பலூருக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். விவசாயிகள் அதிகாலையில் அரியலூர் மார்க்கெட்டிற்கு தினசரி டவுன் பஸ்சில் காய்கறி கொண்டு செல்வது வழக்கம். அன்றாடம் 50-க்கும் மேற்பட்டோர் வெளியூருக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மருத்துவமனைக்கும் செல்வதற்கு 2 கிராம மக்களும் அப்பகுதியில் வரும் டவுன் பஸ்சை நம்பியே உள்ளனர். டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ்கள் தினமும் 2 கிராமங்களுக்கு சுமார் 20 நடை வந்து சென்றன.

தார்ச்சாலை அமைக்கும் பணி

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் உசேன் நகரம் கிராமத்தில் தொடங்கி புஜங்கராயநல்லூர் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் நொச்சிகுளம் கிராமத்தில் தெற்குதெருவில் உள்ள வளைவில் புதிதாக தரை பாலம் அமைக்கப்பட்டது. இதன் பணி முடிவுற்று மூன்று மாதங்கள் ஆகின்றது. மேலும் இந்த புதிய தார்ச்சாலையில் 2 சறுக்கு பாலமும் அமைக்க வேண்டி உள்ளது. சாலையின் இருபுறமும் மண் கொட்டப்பட்ட நிலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் நிலுவையில் உள்ளது

தூக்கி செல்கின்றனர்

கடந்த 5 மாதங்களாக நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் கிராமத்தின் ஊருக்குள் டவுன் பஸ்கள் வராமல் அரியலூர், பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் கேட்டில் இருந்து வரும் பஸ்கள் ஜமீன் பேரையூர் கிராமத்திற்கு எரிகரை முன்பாகவே இரண்டு கிராம மக்களையும் இறக்கி விட்டு விட்டு உசேன் நகரம் வழியாக அரியலூருக்கும், கூத்தூர் வழியாக ஆலத்தூர் கேட், பெரம்பலூருக்கும் சென்று விடுகின்றன. இதனால் 2 கிராம மக்களும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து செல்வது அப்பகுதி மக்களுக்கு சிரமமாகவும் உள்ளது. இதில் சிலர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்களிடம் பயத்துடன் ‘லிப்ட்’ கேட்டு வந்து செல்கின்றனர். விவசாய பொருட்களை தலைச்சுமையாக தூக்கி செல்கின்றனர்.

கோரிக்கை

2 கிராம மக்களின் சிரமத்தை போக்க புதிதாக அமைக்கப்படும் தார்ச்சாலை பணியை விரைந்து முடித்தும், நொச்சிக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட பாலத்தின் விடுபட்ட பணிகளை விரைந்து முடித்தும், அந்த கிராம மக்களின் சிரமத்தை போக்கிடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களின் சிரமத்தையும் கவனத்தில் கொண்டு போக்கிடுமாறும், அவ்வாறு விரைந்து சாலைப் பணியை முடிக்காமல் காலதாமதம் ஏற்படுத்தினால் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் நடத்த உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story