திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா


திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா
x
தினத்தந்தி 20 May 2019 10:30 PM GMT (Updated: 20 May 2019 9:12 PM GMT)

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா நடந்தது.

திருச்சி,

திருச்சியில் மதுரை சாலையில் உள்ள ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்கா எனும் நத்தர்ஷா பள்ளிவாசலில் 1,022-வது ஆண்டு சந்தனக்கூடு எனும் உரூஸ் விழா கடந்த 6-ந் தேதி ரமலான் பிறை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 15-ந் தேதி பீர் உட்கார வைத்தல் நிகழ்ச்சியும், 19-ந் தேதி துர்பத் என்னும் சுத்தம் செய்தல் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய விழாவான சந்தனம் பூசும் வைபமான சந்தனக்கூடு விழா நேற்று இரவு நடந்தது.

இதையொட்டி இரவு 11.30 மணிக்கு மகான் ஹஜ்ரத் சுல்தான் சையத் பாபாயே நத்தர்ஹர் தப்லே ஆலம் பாதுஷா தவுல் ஸ்மந்தர் கத்தஸிர்ராஹூல் அஜீசிக்கு, நத்தர்ஷா பள்ளிவாசல் தலைமை அறங்காவலர் ஏ.ஹாஜா மொஹிதீன், பொது அறங்காவலர்கள் டி.அப்துல்லா ஷா, டாக்டர் எம்.ஏ.அலீம், பங்காளி அறங்காவலர் சையத் அமீனுதீன், பரம்பரை அறங்காவலர் சையத் அக்பர் ஹஸன் ஆகியோர் மலர் போர்வை போர்த்தினர். இந்த நிகழ்ச்சியில் செங்பட்னா சையத் சாதாத் சகாப், தர்கா பங்காளிகள் ஜே.எஸ்.எம்.ஜமாலுதீன், சையத் ஜாக்கீர், ஹூமாயூன், முபாரக், ஷயின்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

நள்ளிரவில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது. பெரியகடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, மேலபுலிவார்டு சாலை, மதுரை ரோடு வழியாக இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை நத்தர்ஷா பள்ளிவாசலை ஊர்வலம் அடைந்தது. ஊர்வலத்தில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மதபாகுபாடின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். சந்தனக்கூடு விழாவையொட்டி, நத்தர்ஷா பள்ளிவாசல் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது. விழாவையொட்டி மரக்கடை பாலத்தில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. திருச்சி-மதுரை சாலையில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரியும் நடந்தது.

நாளை நிறைவு

நாளை(புதன்கிழமை) பீர் சற்குரு எழுப்புதலும், 23-ந் தேதி(வியாழக்கிழமை) இரவு கச்சேரியுடன் விழா நிறைவுபெறுகிறது. 

Next Story