திருமங்கலம் நகராட்சி சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக இயற்கை உரங்கள்


திருமங்கலம் நகராட்சி சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக இயற்கை உரங்கள்
x
தினத்தந்தி 20 May 2019 10:55 PM GMT (Updated: 20 May 2019 10:55 PM GMT)

திருமங்கலம் நகராட்சி சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருமங்கலம்,

திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி 24 டன் குப்பை மற்றும் கழிவுகள் கிடைக்கின்றன. இதில் 15 டன் மக்கும் குப்பைகள். இந்த மக்கும் குப்பைகளை இயற்கை உரங்களாக தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் தற்போது ஈடுபட்டு வருகிறது. அதன்படி நகரில் சேகரமாகும் மக்கும் குப்பைகளை தரம்பிரித்து உரங்களாக மாற்றுவதற்காக திருமங்கலத்தில் தெற்குத்தெரு, உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு ஆகிய இடங்களில் குப்பை கிடங்குகள் அமைக்கப்படுகிறது.

இதில் தெற்குத்தெருவில் குப்பை கிடங்கு பணிகள் முடிவடைந்து அங்கு உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு 3 டன் குப்பைகளில் இருந்து 500 கிலோ உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 12 டன் மட்கும் குப்பைகளை இயற்கை உரங்களாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்ற 2 இடங்களிலும் குப்பைகளை இயற்கை உரங்களாக தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர மக்காத குப்பைகளை தனியார் சிமெண்டு கம்பெனிகளுக்கு எரிபொருளாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கரிசல்பட்டியில் உள்ள குப்பை கிடங்கை சுத்தம் செய்து, அந்த இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குப்பை கிடங்கை சுத்தம் செய்ய ரூ.1 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே திருமங்கலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் இனிவரும் காலங்களில் இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்று கொள்ளலாம். இந்த உரங்களை அனைத்து வகையான காய்கறி பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

இந்த தகவலை திருமங்கலம் நகராட்சி அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Next Story