மரபு நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
மரபு நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
ஊட்டி,
நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில், ஆதிவாசி இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் சங்கத்தின் 62-வது ஆண்டு விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். பின்னர் ஆதிவாசிகள் குறித்த 3 புத்தகங்களை வெளியிட்டு, ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுக்காக பணிபுரிந்த 13 பேருக்கு விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஆதிவாசிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பத்ம ஸ்ரீ விருது பெற்ற நரசிம்மன் மருத்துவம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த 1958-ம் ஆண்டு சங்கத்தை ஆரம்பித்தார். அவரது மறைவுக்கு பின்னர் ஆம்ஸ்ட்ராங் என்ற பெண்மணி சங்கத்தை நடத்தி ஆதிவாசிகளே சங்கத்தை இயக்கும் வகையில் மேம்படுத்தினார். அதை தொடர்ந்து தற்போது சங்கம் ஆதிவாசி மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.
நீலகிரியில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், கோத்தர் இனங்களை சேர்ந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் இடங்களில் கடுமையான உழைப்பில் ஈடுபடுகிறார்கள். அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த 24 உண்டு உறைவிட பள்ளிகள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு, கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. ஆதிவாசி மக்கள் தங்களது குழந்தைகளுக்கு கல்வியை தொடர்ந்து அளித்து மேம்படுத்த வேண்டும்.
ஆதிவாசிகள் நலச்சங்கம் மூலம் ஆதிவாசிகள் இடையே மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், 68 பேருக்கு சிக்கில் செல் அனீமியா என்ற மரபு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசு மூலம் அளிக்கும் தொழிற்பயிற்சிகளை பெற்று வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆதிவாசி மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள், மேம்பாட்டு பணிகளை ஒளிவு, மறைவு இல்லாமல் செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது, கூடலூர் பகுதியில் தனியார் வன உரிமை சட்டத்தின்படி, ஆயிரத்து 333 ஆதிவாசிகளுக்கும், மற்றவர்கள் 80 பேருக்கும் நில உரிமை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 300 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, தேசிய தொழில் முனைவோர் திட்ட இயக்குனர் உதயகுமார், நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க தலைவி ராஜலட்சுமி, செயலாளர் ஆல்வாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆதிவாசிகளின் புகைப்பட கண்காட்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
Related Tags :
Next Story