சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாற்று இடம் கேட்டு ஆட்டோ, கால் டாக்சி டிரைவர்கள் போராட்டம்


சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாற்று இடம் கேட்டு ஆட்டோ, கால் டாக்சி டிரைவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 May 2019 10:30 PM GMT (Updated: 21 May 2019 4:00 PM GMT)

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாற்று இடம் கேட்டு ஆட்டோ மற்றும் கால் டாக்சி டிரைவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களுக்கும் சேலம், கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கும் தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோன்று வெளிமாநிலத்தில் இருந்தும் சென்னைக்கு பல ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ மற்றும் கால் டாக்சியை பயன்படுத்தி தாங்கள் போக வேண்டிய இடத்துக்கு செல்வார்கள். இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற இருப்பதால் ரெயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ மற்றும் கால் டாக்சிகளை 2 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து ஆட்டோ மற்றும் கால் டாக்சி டிரைவர்கள் உடனடியாக எங்களால் காலி செய்ய முடியாது. எனவே எங்களுக்கு ரெயில் நிலையம் அருகே மாற்று இடத்தை ஏற்படுத்தி கொடுத்தால் காலி செய்வோம் என்று நேற்று காலை 6 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து கால்டாக்சி ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, நாங்கள் இந்த பகுதியில் 50 வருடங்களாக ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டி வருகிறோம். ஏற்கனவே இதுபோன்று கடந்த வருடம் ஏதோ பணிகள் நடைபெறுவதாக கூறி ஆட்டோ மற்றும் காரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினர். அதன்பிறகு நாங்கள் போராட்டம் நடத்தியதால் ரெயில் நிலையம் அருகே 60 ஆட்டோக்கள் நிறுத்தும் அளவிற்கு இடம் கொடுத்தார்கள். வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டோம். தற்போது மீண்டும் வந்து மெட்ரோ ரெயில் பணி நடைபெறுகிறது என திடீரென்று நோட்டீஸ் கொடுத்து 2 நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

நாங்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு தினமும் வாடகைக்கு செல்லும் தொகையில் இருந்து 50 சதவீதம் பணம் செலுத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story