விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 May 2019 11:15 PM GMT (Updated: 21 May 2019 6:37 PM GMT)

செம்பனார்கோவில் அருகே விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கி.மீட்டர் தூரத்துக்கு கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம், முடிகண்டநல்லூர் உள்பட பல கிராமங்களில் விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பணியின்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி குழாய்கள் பதிப்பதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் சாகுபடி செய்த வயலில் குழாய்கள் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய நிலம், நீர் பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தை சேர்ந்த விஷ்ணுகுமார், பாலன் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி உமையாள்புரம், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்த விளைநிலங்களிலும், சாகுபடி செய்யாத விளை நிலங்களிலும் கெயில் நிறுவனத்தினர் தொடர்ந்து ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

காரைக்காலை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கெயில் நிறுவனம் விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் முன்னறிவிப்பு இன்றி விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியால் தற்போது உழவு செய்துள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ராட்சத பொக்லின் எந்திரங்களை சாகுபடி செய்த விளைநிலத்தில் இறக்கி குழாய்கள் பதிக்கப்படுகிறது. இதனால் சாகுபடி செய்த நெற்பயிர்கள் நாசமடைந்து எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை நிறுத்தக்கோரி தொடர்ந்து வலியுறுத்தியும், கெயில் நிறுவனத்தினர் தீவிரமாக குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story