மதுரை அருகே, ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால் தம்பதி தற்கொலையா?
மதுரை அருகே ஒரே கயிற்றில் தூக்கிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டனர். ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால்தான் அவர்கள் தற்கொலை செய்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை,
மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டையில் வசித்து வந்தவர் வெங்கடசுப்பிரமணியன் (வயது 40). அவருடைய மனைவி மீனாட்சி (36). காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு குழந்தை இல்லை. வெங்கடசுப்பிரமணியன் முனைவர் பட்டம் பெற்றவர். ஆராய்ச்சிலும் ஈடுபட்டு வந்தார். அவர் அதே பகுதியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி மையம் வைத்து நடத்தி வந்தார். தொழில் தொடர்பாக அவர் சிலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். ஆனால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவர் தவித்து வந்தார். கடன் பிரச்சினையால் மன வேதனையில் வெங்கடசுப்பிரமணியன் இருந்து வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வெங்கடசுப்பிரமணியனும், அவரது மனைவி மீனாட்சியும் வீட்டினுள் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
அவர்கள் தற்கொலை செய்து 2 நாட்களுக்கு பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இதுதொடர்பாக நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து வெங்கடசுப்பிரமணியன் வீட்டை திறந்து பார்த்தபோது தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடல்களை போலீசார் பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தம்பதி எழுதியதாக கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று மட்டும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் கடன் பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால், வெங்கடசுப்பிரமணியன் ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததாகவும், அதனால் ஏற்பட்ட கடனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது. எனவே இதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த தம்பதியின் பெற்றோர் உள்பட உறவினர்கள் யார்? என்ற விவரம் தெரியாமல் போலீசார் திகைத்தனர். இதனாலேயே அவர்களது உடல்கள் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் வெங்கடசுப்பிரமணியனின் பெற்றோர் பெங்களூருவிலும், மீனாட்சியின் பெற்றோர் சென்னையிலும் வசித்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள் இன்று (புதன்கிழமை) மதுரைக்கு வருகின்றனர். அவர்கள் வந்த பிறகே இருவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story