திருமங்கலம் அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திருமங்கலம் அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 May 2019 10:15 PM GMT (Updated: 21 May 2019 7:54 PM GMT)

திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 5 மணி நேரம் நீடித்த மறியலால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவிலில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கிராமத்தில் 6 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த 6 ஆழ்துளை கிணறுகளில் 2 ஆழ்துளை கிணறுகளின் மின் மோட்டார் பழுதடைந்தது. மேலும் 2 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது.

இதனால் ஆண்டிப்பட்டி-சேடபட்டி வைகை கூட்டுக்குடிநீர் திட்டம், முக்தி நிலையம், தனியார் நிறுவனங்களில் இருந்து தண்ணீர் வாங்கி கிராம மக்கள் சமாளித்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகை கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தற்போது கூடக்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காரியாபட்டி-கூடக்கோவில் சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் குறுக்கே மரக்கட்டைகள், முள்வேலி உள்ளிட்டவற்றை வைத்து தடுப்பை ஏற்படுத்தினர். பின்னர் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாகவே குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். பழுதடைந்த 2 கூட்டுக்குடிநீர் குழாய்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கிராம மக்களின் மறியல் போராட்டம் சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னதாக மறியல் குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் மற்றும் கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி கருணாகரன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story