கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: லீக் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி


கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: லீக் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 8:04 PM GMT)

கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. இதில் நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

கரூர்,

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. போட்டியில் ஏ பிரிவில் புதுடெல்லி ஏர்போர்ஸ், சென்னை ஐ.சி.எப்., மும்பை சென்டிரல் ரெயில்வே, பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணியும் மற்றும் பி பிரிவில் லோனாவில்லா இந்தியன் நேவி, சென்னை இந்தியன் வங்கி, ஐதராபாத் வருமானவரித்துறை, புதுடெல்லி இந்திய ராணுவ அணி உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு 7 மணியளவில் லீக் போட்டிகளை ஆசியன் பேப்ரிக்ஸ் நிறுவன தலைவர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். கரூர் கூடைப்பந்து கழக தலைவர் வி.என்.சி.பாஸ்கர், செயலாளர் முகம்மது கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை அணி வெற்றி

லீக் போட்டியின் தொடக்கத்தில் ஏ பிரிவை சேர்ந்த சென்னை ஐ.சி.எப். அணி மற்றும் மும்பை சென்டிரல் ரெயில்வே அணிகளுக் கிடையே போட்டி நடந்தது. தொடக்கம் முதலே விறு விறுப்பாக நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி பந்தை லாவகமாக கூடையில் போட்டு புள்ளிகளை பெற்றனர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் 88-க்கு 88 என்கிற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சமநிலையை எட்டியதால், வெற்றியை நிர்ணயிப்பது எப்படி? என ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு தொற்றி கொண்டது. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு போட்டி நடந்தது. இதில் இரண்டு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். எனினும் கடைசி நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்டு சென்னை அணி புள்ளிகளை அள்ளியது. அந்த அணி 98 புள்ளிகளுடன் வெற்றி பெற்றது. எதிரணியான மும்பை 96 புள்ளிகளுடன் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் லோனாவில்லா இந்தியன் நேவி அணியும், ஐதராபாத் வருமானவரித்துறை அணியும் மோதின.

சுழற்கோப்பை-பரிசுத்தொகை

லீக் போட்டியானது வருகிற 24-ந்தேதி வரையிலும், 25-ந்தேதியில் நாக் அவுட் முறையிலான போட்டியும், 26-ந்தேதி இறுதி போட்டியும் நடக்கிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு சுழற்கோப்பையுடன், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது. 2-ம் இடம் பெறும் அணிக்கு எல்.ஜி.வரதராஜ் நினைவு சுழற்கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும், 3-ம் இடம் பெறும் அணிக்கு சூரியநாராயண செட்டியார் நினைவு சுழற்கோப்பையுடன், ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்படுகிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கூடைப்பந்து கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். 

Next Story