கோவையில் நடந்த நகை கொள்ளை வழக்கில் ஜாமீனில் வந்தவர் மர்மச்சாவு


கோவையில் நடந்த நகை கொள்ளை வழக்கில் ஜாமீனில் வந்தவர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 21 May 2019 10:51 PM GMT (Updated: 21 May 2019 10:51 PM GMT)

கோவையில் நடந்த நகைகொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் வேலூரில் தண்டவாளம் அருகே ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

வேலூர்,

வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்கபூர். இவருடைய மகன் ரிஸ்வான் (வயது22), கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவையில் காக்காச்சாவடி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து கேரளாவில் உள்ள நகைக்கடைக்கு காரில் நகைகள் கொண்டு செல்லப்பட்டன.

அப்போது அந்த காரை விபத்துக்குள்ளாக்கி அதில் இருந்து 3 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை 16 பேர் சேர்ந்து கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து கோவை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த ரிஸ்வான், தமிழ்செல்வன் மற்றும் சென்னையை சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த ரிஸ்வான், வாரம் ஒருமுறை கோவைக்கு சென்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். அதன்படி நேற்றுமுன்தினம் கோவைக்கு சென்று கையெழுத்திட்டு விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மாலையில் வெளியே சென்றவர் இரவில் வீடுதிரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேண்பாக்கத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலத்துக்கு அடியில் தண்டவாளம் அருகே கால் மற்றும் தலையில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று பார்வையிட்டனர்.

மேலும் ரிஸ்வான் தண்டவாளத்துக்கு அருகில் இறந்து கிடந்ததால் காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரிஸ்வானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய செல்போன், அருகிலேயே கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.

அதில் இருந்து ரிஸ்வான் அதிகாலை 3 மணிவரை மற்றநபர்களுடன் பேசியிருக்கிறார். அதன்பிறகே அவர் இறந்திருக்கிறார். எனவே அவர் யார் யாருடன் பேசியிருக்கிறார் என்பது குறித்தும், நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய வேறுநபர்கள் யாரும் அவரை கொலைசெய்தார்களா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story