செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 May 2019 11:15 PM GMT (Updated: 22 May 2019 7:19 PM GMT)

செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பல்வேறு இடங்களில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இயற்கை எரிவாயு எடுப்பதற்காக பல்வேறு இடங்களில் வயல்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை- திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில், பூமிக்கு அடியில் எரிவாயு எடுப்பதற்கான குழாய்கள் நேற்று முன்தினம் இரவு தனியாருக்கு சொந்தமான இடத்தில் இறக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட அந்த பகுதி விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் எரிவாயு எடுப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள குழாய்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் கண்ணன் கூறியதாவது:-

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு செங்கிப்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் எரிவாயு எடுத்து கொண்டு செல்வதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டபோது விவசாயிகள் போராட்டம் நடத்தியதையடுத்து அப்போது இந்த திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி, மருதக்குடி, முத்தாண்டிபட்டி, புதுப்பட்டி, கொட்டரப்பட்டி, நவலூர் வழியாக விவசாய நிலங்களில் குழாய் பதித்து திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை வரையில் எரிவாயு கொண்டு செல்வதற்காக குழாய்கள் இறக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினால் இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும். ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே உடனடியாக இந்த பகுதியில் இறக்கி வைக்கப்பட்டுள்ள குழாய்களை அப்புறப்படுத்துவதுடன் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஓன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம். இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். மேலும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் வக்கீல் ஜீவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், பூதலூர் ஒன்றிய விவசாய சங்க தலைவர் தமிழரசன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு வல்லம் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், செங்கிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அந்த பகுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க எரிவாயு எடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த குழாய்களின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story