வானூர் அருகே, கோவில் திருவிழா ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - 5 பேர் காயம்


வானூர் அருகே, கோவில் திருவிழா ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - 5 பேர் காயம்
x
தினத்தந்தி 22 May 2019 10:15 PM GMT (Updated: 22 May 2019 9:39 PM GMT)

வானூர் அருகே கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர்.

விழுப்புரம்,

வானூர் அருகே ஒட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு சமூகத்தினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் சாமி ஊர்வலம் செல்வதில், எல்லை பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் செடல், கரகம் மற்றும் அலகு குத்திக்கொண்டு 7 டிராக்டர்களில் ஊர்வலம் சென்றனர். அப்போது குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு ஊர்வலம் சென்றதும் தெரு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த தாக்குதலில் அதே கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் மனைவி சுகந்தி (வயது 24), முருகேசன் (42), அரவிந்த் (25), பழனி (32), கரசூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (40) ஆகியோர் காயமடைந்தனர். உடனே அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதுதொடர்பாக வானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நீடித்து வருவதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story