தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு


தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
x
தினத்தந்தி 22 May 2019 11:30 PM GMT (Updated: 22 May 2019 9:58 PM GMT)

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 18-ந் தேதியும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 19-ந் தேதியும் நடந்தது. இங்கு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு அனைத்து எந்திரங்களும் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்பட்டு உள்ளது. அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இரவு பகலாக சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி முகவர்களும் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.

இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக 300 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இன்று காலையில் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் எந்தெந்த தொகுதியில் பணியாற்ற வேண்டும் என்று பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதேபோன்று ஒவ்வொரு வேட்பாளருக்கும் நாடாளுமன்ற தொகுதிக்கு 96 வாக்கு எண்ணிக்கை முகவர்களும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தலா 17 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. அனைத்து மேஜைகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுக்களாகவும், சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுக்களாகவும் நடக்கிறது.

மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 5 எந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடிந்தபிறகே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையையொட்டி வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, பொது தேர்தல் பார்வையாளர்கள் சீமா சர்மா ஜெயின், மாதவி லதா, சுரேஷ்குமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் வாக்குகள் எண்ணும் அறைகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண் பார்வையாளர் நியமித்தல், வாக்கு எண்ணும் அலுவலர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வரிசை எண் குறிப்பிடப்பட்டு உள்ளதா என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட அஞ்சலக வாக்குச்சீட்டு, எண்ணுவதற்கான முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார், விளாத்திகுளம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story