வாகன காப்பகத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு: நெல்லை மாநகராட்சிக்கு அபராதம் - நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு


வாகன காப்பகத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு: நெல்லை மாநகராட்சிக்கு அபராதம் - நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 May 2019 10:30 PM GMT (Updated: 22 May 2019 10:18 PM GMT)

வாகன காப்பகத்தில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட வழக்கில் நெல்லை மாநகராட்சிக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நெல்லை,

பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் இம்மானுவேல் ஜெயராஜ் (வயது 55). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். 14-10-2016 அன்று தனது மோட்டார் சைக்கிளை நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில் நிறுத்தினார்.

அதற்கான கட்டணம் ரூ.5 செலுத்தினார். பின்னர் அவர் கொச்சின் சென்றார். 17-10-2016 அன்று நெல்லை திரும்பினார். அவர் தனது மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். அங்கு இம்மானுவேல் ஜெயராஜ் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். நெல்லை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தார். அவர் மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், வக்கீல் ரவீந்திரநாத் மூலம் நெல்லை நுகர்வோர் கோட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்கள் சிவமூர்த்தி, முத்துலட்சுமி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினர்.

தீர்ப்பில், “மோட்டார் சைக்கிள் திருடு போனதற்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர், மேலப்பாளையம் உதவி ஆணையாளர், அலுவலர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்ட இம்மானுவேல் ஜெயராஜிக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.7 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story