இலங்கை கடற்படையினர், பொய் வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினர் - விடுதலையாகி வந்த மாணவர்கள் பேட்டி


இலங்கை கடற்படையினர், பொய் வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினர் - விடுதலையாகி வந்த மாணவர்கள் பேட்டி
x
தினத்தந்தி 23 May 2019 4:23 AM IST (Updated: 23 May 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினர் பொய் வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினர் என்று விடுதலையாகி வந்த மாணவர்கள் பேட்டி அளித்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி முனியசாமி மற்றும் சந்தியா ஆகிய 2 பேருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் ஜான், ரிமோன்சன், ரிமோனியன், சாம்டேனியல், துரைப்பாண்டி உள்ளிட்ட 9 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த 13-ந் தேதி இந்த மீனவர்கள் நடுக் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் வைத்து 2 படகுகள் மீது மோதினர்.

பின்னர் அதில் இருந்த ராமேசுவரம்,தங்கச்சி மடத்தை சேர்ந்த 8 மீனவர்களை சிறைபிடித்து சென்று சிறையில் அடைத்தனர்.இதில் சாம்டேனியல் மற்றும் துரைப்பாண்டி ஆகிய 2 பேரும் மாணவர்கள் ஆவர்.இந்நிலையில் மத்திய-மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக 4 மாதத்திற்கு மேலாக சிறையில் தவித்து வந்த 8 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கையில் இருந்து விமானம் மூலமாக மதுரை வந்து தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் விடுதலையாகி வந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த மாணவர்கள் சாம்டேனியல், துரைப்பாண்டி ஆகியோர் கூறியதாவது:- குடும்ப சூழ்நிலை காரணமாக மீன் பிடிக்க கடலுக்கு சென்றோம்.நடுக் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலை வைத்து படகுகள் மீது வேகமாக மோதி படகுகளை மூழ்கடித்தனர். ஒரு படகு முழுமையாக மூழ்கியபோது எங்கள் படகும் சேதமான நிலையில் கடல் நீர் உள்ளே வந்து கொண்டிருந்தது. அப்போது இலங்கை கடற்படையினர் 5 பேர் எங்கள் படகில் ஏறி எங்களை மண்டியிட வைத்து பிளாஸ்டிக் கயிற்றால் பின் பகுதியில் கொடூரமாக தாக்கினார்கள். இலங்கை சிறையில் துர்நாற்றத்துடன் உணவு வழங்கப்பட்டது. வேறுவழியின்றி அதனை சாப்பிட்டோம். இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றால் இலங்கை கடற்படையினர் மதிப்பதே கிடையாது.மிகவும் கேவலமாக பார்க்கிறார்கள்.பொய் வழக்குப்பதிவு செய்வோம் என இலங்கை கடற்படையினர் எங்களை மிரட்டி கட்டாயப்படுத்தினர்.உயிரே போனாலும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து விட்டோம். இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினர்.

Next Story