நாடாளுமன்ற தேர்தல் வெற்றி: காங்கிரஸ் கட்சியினர் வெற்றி ஊர்வலம்
புதுவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வெற்றி ஊர்வலம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுவை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18–ந்தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னணியில் இருந்தார்.
வாக்குகள் எண்ணிக்கை நேரமாக நேரமாக அவரது முன்னணியும் அதிகரித்தது. புதுவை மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியின் தொகுதியை தவிர மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னணி கிடைத்தது.
நள்ளிரவு 12–30 மணி அளவில் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 25 வாக்குகள் வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றிபெற்றார். அவரது வெற்றியை நேற்று அதிகாலை 3 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் அருண் அறிவித்தார்.
இந்தநிலையில் வெற்றி சான்றிதழை பெற நேற்று காலை வைத்திலிங்கம், முதல்–அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருண், தேர்தலில் வெற்றிபெற்ற வைத்திலிங்கத்திடம் சான்றிதழை வழங்கினார்.
அதன்பின் கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த காங்கிரசார் வெற்றி ஊர்வலம் நடத்தினார்கள். திறந்த ஜீப்பில் முன்னணி தலைவர்கள் வர காங்கிரசார் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வழியெங்கிலும் அவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ராஜீவ்காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு வைத்திலிங்கத்துக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தனது வெற்றிக்கு கடுமையாக பாடுபட்ட காங்கிரஸ், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வைத்திலிங்கம் நன்றி தெரிவித்தார்.