என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்


என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 24 May 2019 11:00 PM GMT (Updated: 24 May 2019 7:27 PM GMT)

என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுச்சேரி,

புதுவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் எம்.பி.யாகவும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க.வை சேர்ந்த வெங்கடேசனும் வெற்றிபெற்றனர்.

இந்த 2 தேர்தல்களிலும் என்.ஆர்.காங்கிரஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏனெனில் புதுவை எம்.பி., தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. ஆகிய 2 பதவிகளும் என்.ஆர்.காங்கிரஸ் வசம் இருந்தவை. கடந்த சில மாதங்களாக ஆட்சிமாற்றம் குறித்து பேசி வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. வெற்றி பெற்றதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு ரங்கசாமியின் நடவடிக்கைகள் மட்டுமே அரசியல் கட்சியினரால் பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. என்.ஆர்.காங்கிரசுக்கு தற்போது 7 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ரங்கசாமியின் தொகுதியைத்தவிர எந்த தொகுதியிலும் என்.ஆர்.காங்கிரஸ் முன்னணி பெறவில்லை. மாறாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் இருந்தார் வைத்திலிங்கம்.

நாடாளுமன்ற தொகுதி, தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் தோல்வி என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த கட்சி தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மத்திய அரசு, கவர்னர் கிரண்பெடியின் தலையீடுகளால் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. மேலும் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கே இல்லாத 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது. இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தை மட்டுமல்லாது, பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்று முழங்கிய ரங்கசாமி இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. பெயரளவுக்கு கூட கருத்து தெரிவிக்கவில்லை. அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி தற்போது பல மாதங்கள் சம்பளம் இல்லாமல் இருக்கும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது பணியில் நியமிக்கப்பட்டவர்கள்.

அவர்களுக்கு ஆதரவாக ரங்கசாமி குரல் கொடுக்காததுடன் அறிக்கை கூட வெளியிடவில்லை. பொதுமக்களுக்கு தேவையான இலவச அரிசி வழங்காதது? திட்டங்களை நிறைவேற்றாதது? குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. நாள் தோறும் கோவில், குளம் என்று சுற்றி வந்தவர் எந்த தொகுதிக்கும் சென்று மக்கள் குறைகூட கேட்கவில்லை.

ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கான பணியை மேற்கொள்ளவில்லை. ஓரிரு நிமிடம் சட்டமன்றத்தில் இருந்துவிட்டு ஆட்சியை குறை கூறிவிட்டு வெளி நடப்பு செய்வதே ரங்கசாமியின் வாடிக்கையாக இருந்தது.

மக்களுக்கு அரசு செய்ய தவறியதை பட்டியலிட்டு சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டி மக்களின் தேவைகளை பெற்றுத்தர ரங்கசாமி தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இதை முதல்-அமைச்சர் நாராயணசாமியே சட்டசபையில் பலமுறை சுட்டிக்காட்டினார். அதையும் ரங்கசாமி கண்டுகொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி என்.ஆர். காங்கிரசின் கோட்டையாக விளங்கிய தட்டஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு ரங்கசாமியின் குடும்ப அரசியலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கதிர்காமம், இந்திராநகர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு ரங்கசாமி வெற்றிபெற்றார். இதில் இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இங்கு நடந்த தேர்தலில் தனது உடன்பிறந்த அண்ணன் மகனான தமிழ்செல்வத்தை நிறுத்தி வெற்றிபெற செய்தார்.

அப்போது அந்த தொகுதியில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. தற்போது தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வாய்ப்பு கேட்டனர். அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து விட்டு தனது சொந்த அக்காள் மகன் நெடுஞ்செழியனை வேட்பாளராக ரங்கசாமி நிறுத்தினார்.

அதையும் வெளிப்படையாக அறிவிக்காமல் அவரை நேரடியாக வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார். அப்போதே கட்சியினர் நலனை மறந்து குடும்ப அரசியல் செய்கிறாரோ? என்ற கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் நேரடியாக யாரும் அதை ரங்கசாமியிடம் சுட்டிக்காட்ட முன்வரவில்லை.

கட்சி தொடங்கி 8 ஆண்டுகளான போதிலும் மாவட்டம், தொகுதி, கிளைக்கழக நிர்வாகிகள் இதுவரை நியமிக்கப்படவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி என்பது ‘ஒன்மேன் ஆர்மி’யாகவே செயல்பட்டது. இதனால் பொறுப்பினை உணர்ந்து யாரும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.

எந்த கட்சி ஆட்சியானாலும் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது? என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. அதை விடுத்து யார் செயல்பட்டாலும் ஏற்க முடியாது என்பதை தான் தேர்தல் முடிவு வெளிப்படுத்துவதாக உள்ளது. ரங்கசாமியின் இதுபோன்ற நடவடிக்கையே அவரது வீழ்ச்சிக்கு காரணம். மக்களின் உரிமைகளுக்காக களத்தில் எப்போதும் நிற்க வேண்டும். இதைத்தான் அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் முடிவு சுட்டிக்காட்டுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Next Story