தாம்பரம் அருகே டிப்பர் லாரி மோதி மின்வயர் அறுந்து விழுந்து தீ விபத்து; மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது சம்பவம்


தாம்பரம் அருகே டிப்பர் லாரி மோதி மின்வயர் அறுந்து விழுந்து தீ விபத்து; மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது சம்பவம்
x
தினத்தந்தி 25 May 2019 3:15 AM IST (Updated: 25 May 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கீழே விழுந்தவர்கள் மீது மோதாமல் இருக்க டிப்பர் லாரியை டிரைவர் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் உயர்அழுத்த மின்வயர் அறுந்து அருகில் உள்ள முட்செடிகள் மீது விழுந்ததில் அவை தீயில் எரிந்து கருகின.

தாம்பரம்,

திருவண்ணாமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர், சென்னையை அடுத்த தாம்பரத்தில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். இவர், தன்னுடைய நண்பரான சீனிவாசன் (40) என்பவருடன் நேற்று வேலைக்காக மோட்டார் சைக்கிளில் தாம்பரம்–அனகாபுத்தூர் சாலையில் திருநீர்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் குப்பை கிடங்கு அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர்.

இவர்கள் மீது மோதாமல் இருக்க டிப்பர் லாரியை அதன் டிரைவர் திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, சாலையோரமாக இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், மின்கம்பத்தில் இருந்து உயர்அழுத்த மின்வயர் அறுந்து சாலையோரம் உள்ள முட்செடிகள் மீது விழுந்தது.

இதில் முட்செடிகள் தீயில் எரிந்து கருகின. இந்த விபத்தில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நந்திவரத்தை சேர்ந்த முருகதாஸ் (26) என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story